வெளிநாடுகளுக்கு செல்வதைவிட விருப்பப்பட்டால் விரைவில் அமையும் மதுரை எய்ம்ஸில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெறலாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் திமுகவின், தமிழகத்தை மீட்போம் கூட்டத்தில் காணொலி வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்;- தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும், ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்கள் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக அரசின் செயல்பாடுகளை தவறான கண்ணோட்டத்தோடு ஸ்டாலின் மக்களிடம் பேசி வருகிறார். வெளிநாடுகளுக்கு செல்வதைவிட விருப்பப்பட்டால் விரைவில் அமையும் மதுரை எய்ம்ஸில் ஸ்டாலின் சிகிச்சை பெறலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்காதது பற்றி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.

மேலும், வடகிழக்கு பருவமழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த கால வெள்ள பாதிப்புகளை அனுபவமாக கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.