Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!!!

stalin appreciates-admk
Author
First Published Dec 10, 2016, 3:31 PM IST


சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகளை, தொடர்ந்து மேற்கொள்ள புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி, சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக திராவிட முன்னேற்ற கழக அரசு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் இந்த திட்டத்தை உருவாக்கினார்.

stalin appreciates-admk

பறக்கும் சாலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரதமரின் ஆலோசகரே 09.11.2012 அன்று நேரடியாக சென்னை வந்து தலைமைச் செயலாளரை சந்தித்தார். “திட்டப் பணிகள் நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுங்கள்”, என்று வேண்டுகோள் விடுத்தபோதும் கூட அதிமுக அரசு அதுபற்றி அக்கறை காட்டவில்லை. திட்டத்தை நிறைவேற்ற முன்வரவும் இல்லை.

இதனால் வேறு வழியின்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் “பறக்கும் சாலைத் திட்டப் பணிகளை நிறுத்துவதற்கு அதிமுக அரசு கொடுத்த பணி நிறுத்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியது. அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் அதிமுக அரசின் முடிவை ரத்து செய்ததோடு மட்டுமின்றி, பறக்கும் சாலைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு 20.02.2014 அன்று தீர்ப்பளித்தது.

தி.மு.கழக அரசில் கொண்டு வரப்பட்ட மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து நெருக்கடி நீங்கும். மதுராவயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வருவதற்கு 1 முதல் 2 மணி நேரம் ஆகும் நிலையில், இத்திட்டம் முன்பே நிறைவேறியிருந்தால் 15 முதல் 20 நிமிடத்திற்குள் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வாகனங்கள் வந்து சேர்ந்து விட முடியும். 

கண்டெயினர்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் பறக்கும் சாலையில் செல்லும் என்பதால் விபத்துக்கள் பெருமளவில் குறையும். மக்கள் செல்லும் சாலைகளில் வாகனங்களின் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறையும். இவை எல்லாவற்றையும் விட இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை துறைமுகத்தை நம்பியுள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும். உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் இத்திட்டத்தால் மாநிலத்தின் வர்த்தகம் பெருமளவு அதிகரிக்கும்.

இப்போது இத்திட்டத்தை நிறைவேற்ற முன் வந்திருப்பது இனியாவது பறக்கும் சாலை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெருக்கடிகளை தீர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கு வித்திடவும் எவ்வித தயக்கமும் இன்றி அதிமுக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios