கழக உடன் பிறப்புகள் என் வேண்டுகோளை ஏற்றுகட்டுப்பட்டுடன் நடந்து கொண்டனர். இத ..இதத்தான் எதிர்பார்த்தேன் என மு.க.ஸ்டாலின் முகநூலில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவு: 

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் இலட்சிய சொற்கள் தான் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு. இந்த மூன்றில், ஓர் இயக்கத்திற்கு முதன்மையானது கட்டுப்பாடே என்பதை நமது தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை நமக்கு நினைவூட்டல் வாயிலாக அறிவூட்டியிருக்கிறார்.

 தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்படும் பண்பு வளரும் போது ‘கண்ணியம்’ தவறாமல் ’கடமை’யாற்றும் பண்பு அதிகரிக்கும் என்பதே இதன் உட்பொருளாகும். அந்தப் பண்பு நம் கழகத் தொண்டர்களிடம் மிகுந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் கோவைக்குச் சென்ற போது, கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அன்பின் காரணமாகவும் ஆர்வமிகுதியாலும் வழியெங்கும் வரவேற்பு பேனர்களை அமைத்திருந்தீர்கள்.

 அத்தகைய பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களிடம் அதிருப்தியை உருவாக்குவதை சுட்டிக்காட்டி, பேனர்களைத் தவிர்த்து கழகத்தின் இருவண்ண இலட்சியக் கொடிகளை உயரப் பறக்க விடுங்கள் என உரிமையுடன் கலந்த அன்பு கோரிக்கையுடன் ஓரிரு நாட்களுக்கு முன் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

செயல்தலைவர் என்ற பொறுப்பில் நான் இருந்தாலும் உங்களில் ஒருவன் என்ற உணர்வுடன் விடுத்த அந்த வேண்டுகோளுக்கு எந்தளவு நீங்கள் செவி சாய்க்கிறீர்கள் என்பதை அறிவதில், தேர்வு எழுதி முடித்துவிட்டு, மதிப்பெண் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் உள்ள மாணவனின் மனநிலையில் இருந்தேன். 

அத்தகைய நிலையில் தான் கழகத்தின் தோழமை அமைப்பின் நிறுவனரும், தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்பிற்குரியவரும், சுயமரியாதை-பகுத்தறிவு உணர்வுகள் குறையாமல் செயல்படுபவருமான பேராசிரியர் சுப.வீராபாண்டியன் அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிர்வாகியான சிங்கராயர் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜன.31 மாலை வேலூர் மாநகருக்குச் சென்றேன்.

அப்போது தான் கழகத்தினரின் கட்டுப்பாட்டினைக் கண்டு வியந்தேன். மகிழ்ந்தேன். ஆம்.. திருமண நிகழ்வில் பங்கேற்பதற்கான தேதி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த காரணத்தால், கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை வரவேற்கும் ஆவலில் ஏராளமான பேனர்களை முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்தனர்.

அந்த நிலையிலும், என்னுடைய உரிமை கலந்த அன்பு வேண்டுகோளை ஏற்று அவற்றைப் பயன்படுத்தாமல் முழுமையாக தவிர்த்திருந்தனர். கழகத்தின் இருவண்ணக் கொடி பல இடங்களிலும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்த மாற்றத்தினை மேற்கொண்ட, தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனாக எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே உறுதியினை கழகத்தினர் தொடர்ந்து கடைப்பிடிக்கும் போது, பேனர் வைப்பதில் இன்னமும் ஆர்வம் காட்டும் ஒரு சிலரின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படும். தலைமையின் உத்தரவுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட பேரியக்கம் இது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படும். 

மக்களின் நலன் காக்க அயராது பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உங்களின் செயல்பாடுகள் பெருமை சேர்க்கும். என் அன்பான கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய அனைவருக்கும் மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் தொடரட்டும். பெருகட்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பெருமிதத்துடன் தனது முக நூலில் பதிவு செய்துள்ளார்.