காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. கடந்த ஒன்றாம் தேதி நடந்த திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு 6ம் தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமரை சந்திக்க அனுமதி பெற்றுத்தருமாறும் மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமருக்கு வலியுறுத்துமாறும் ஆளுநரிம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் பெற்றதாக கூறுபவர்கள், யார் யார் பணம் பெற்றார்கள் என்ற பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.