காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் நேற்றைய தினம், ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்தது. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களும் கைதாகினர்.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டக்குரல் வலுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ அபுபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நேற்றைய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய வணிகர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், கட்சி தலைவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் கூடுதல் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

காவிரி மீட்பு பயணம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, டெல்டா பகுதியில் காவிரி உரிமை மீட்பு பயணம், இரண்டு பிரிவுகளாக நடைபெற இருக்கிறது. வரும் 7ம் தேதி(நாளை) திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து ஒரு பயணம் தொடங்குகிறது. பிறகு வரும் 9ம் தேதி அரியலூர் மாவட்டத்திலிருந்து மற்றொரு பயணம் தொடங்குகிறது. இந்த இரண்டு பயணத்தையும் திராவிடர் கழக தலைவர் வீரமணி தொடங்கி வைப்பார்.

இந்த பயணங்களில் அனைத்து கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் கலந்துகொள்வர்.

மேலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 16ம் தேதி அனைத்து கட்சிகளின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்தார்.