ஜெயலலிதாவுக்கு பிந்தைய அ.தி.மு.க. அமைச்சரவையில் அதிக வாய்த்துடுக்குடன் பேசுகிறவர்கள் எனும் அமைச்சர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். 

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியிலமர்ந்து தியானம் செய்துவிட்டு, சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது அவரை தாறுமாறாக விமர்சித்தவர்களின் மிக முக்கியமானவர் சி.வி.எஸ். 

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொட்டுப் பேசியவர் “இந்த வாரியத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. முதல்வர், துணை முதல்வர், அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தி.மு.க.வின் அறிவுரை, தமிழக அரசுக்கு தேவையில்லை. என்ன செய்ய வேண்டும் என அரசுக்குத் தெரியும்.” என்று எடுத்தெறிந்து பேசித் தள்ளினார். 

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்துவிட்ட நிலையில், சி.வி.சண்முகத்தை தி.மு.க.வினர் போட்டுப் புரட்ட துவங்கியுள்ளனர் இணைய தளங்களில். 

“எங்கள் தளபதியின் அறிவுரை வேண்டாமென்று சொன்ன சி.வி.யே, என்னாச்சு உங்கள் அரசின் லட்சணம்? என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குத் தெரியும்! என சொன்ன சி.வி.யே என்னதான் தெரிந்தது உங்களுக்கு, அந்த அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை தைரியமிருந்தால் கொஞ்சம் வெளியில் சொல்லுங்கள் பார்ப்போம். 

ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் மேல் உச்சபட்ச வெறுப்பில் இருக்கிறது. நம் மாநிலத்தின் உரிமையை கதற கதற மோடியின் காலடியில் போட்டுவிட்டு ஆட்சியை காப்பாற்ற ஜெபித்துக் கொண்டிருந்தீர்களே! தன் மக்களுக்கு, ஆள்பவன் செய்யும் காரியமா இது. பச்சை துரோகம்!” என்று பொளந்துள்ளனர். 

இதற்கு சி.வி.எஸ்.ஸின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கப்போகிறதோ!