தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இதே போல் மைனாரிட்டி அரசாக உள்ள எடப்பாடியை அகற்ற வேண்டும் என ஸ்டாலினும் பேசி வருகிறார்.

ஆனால் மோடி அரசால் எடப்பாடி அரசு காப்பாற்றப்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தான் தமிகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளில் அதிமுக ஜெயித்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த அரசை கவிழ்க்கப் போவதாக எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஸ்டாலினும், தினகரனும் மதுரையில் சந்தித்துப் பேசியதாக திடீரென தகவல் பரவியது. ஆனால்  செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இதை மறுத்தார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். அந்த ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்தாலே, ஓட்டலில் நான் யாரை சந்தித்தேன் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கியிருந்து, பிறகு அங்கிருந்து சென்ற பிறகு தான் நாங்கள் ஓட்டலுக்கே சென்றோம். இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஜி.கே.வாசன் கூட அந்த ஓட்டலில் தங்கியிருந்தார். ஒரே ஓட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல, வழக்கமான ஒன்று தான் என விளக்கம் அளித்தார்.

இந்த ஆட்சியின் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். 20 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது. தங்க தமிழ்செல்வன் உள்பட அனைவரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர்  கூறினார்.