9 மாதங்களில் தங்களது 10 ஆண்டு கால அகோரப்பசியைத் தீர்த்துக்கொள்வதற்கான வேட்டைகளை தி.மு.கவினர் எல்லா இடங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு முதல் உதாரணம்தான் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் நடந்த மெகா ஊழல். அதற்காக டெண்டர் விடப்பட்ட போதே முறைகேட்டிற்கான புள்ளி வைக்கப்பட்டதை நாம்தான் முதன்முதலாக சுட்டிக்காட்டி அதனை ஆரம்பத்திலேயே சரி செய்யுங்கள் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். 

 4 ஆண்டுகளாக பழனிசாமி கம்பெனி எப்படி எல்லாம் தமிழகத்தின் உரிமைகளை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை விட்டுக்கொடுத்து, தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை ஸ்டாலின் கம்பெனி என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அமமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக சுற்றிச்சுழன்று பணியாற்றிவரும் கழகத்தினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா மூன்றாவது அலையின் வீரியம் மெல்ல குறைந்து வந்தாலும், தேர்தல் பணிகளின்போது கவனமுடனும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் பொய்மூட்டைகளுக்கும், பண மூட்டைகளுக்கும் இடையே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி மன உறுதியோடு நாம் களத்தில் நிற்கிறோம். இது உள்ளூர் பிரச்னைகளையும், அந்தந்த பகுதிகளில் அறிமுகமான முகங்களையும் முன்னிறுத்தி நடக்கிற தேர்தல் என்றாலும் தீயசக்தியான தி.மு.க &கோ-வையும், துரோகத்தின் பெரும் உருவமான பழனிசாமி கம்பெனியையும் மக்கள் முன் தோலுரித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நிறைவேற்றவே முடியாது என்று தெரிந்தும் சட்டப்பேரவைத்தேர்தலில் வாய்க்கு வந்தவாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவீசி மக்களை ஏமாற்றிய தி.மு.கவின் தில்லுமுல்லுகள்தான் எத்தனை? எத்தனை? 

* ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்றார்கள் 

* மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி என்று அடித்துவிட்டார்கள்.

* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்போம் என்றார்கள்.

* குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/-தருவோம் என அள்ளிவிட்டார்கள்.

* 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தவர்கள், இப்போது அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை உருவாக்கி ஏமாற்றுகிறார்கள்.

* பெட்ரோல்- டீசல் விலையில் லிட்டருக்கு5ரூபாய் குறைப்போம் என்றவர்கள் அரசின் நிதிநிலை சரியில்லை என்று தற்போது சாக்கு போக்கு சொல்கிறார்கள்.

அரசின் நிதிநிலை சரியில்லை என்பது இவர்களுக்கு இப்போதுதான் தெரியுமா என்ன? பழனிசாமி கம்பெனி தமிழக அரசு கஜானாவை மொத்தமாக சுரண்டிச் சென்றதுதான் ஊர் அறிந்த ரகசியமாயிற்றே! எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற வெறியில்தானே பச்சையான பொய்களை வாக்குறுதிகள் என்ற பெயரில் அவிழ்த்துவிட்டார்கள்.

இதோ, இந்த 9 மாதங்களில் தங்களது 10 ஆண்டு கால அகோரப்பசியைத் தீர்த்துக்கொள்வதற்கான வேட்டைகளை தி.மு.கவினர் எல்லா இடங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு முதல் உதாரணம்தான் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் நடந்த மெகா ஊழல். அதற்காக டெண்டர் விடப்பட்ட போதே முறைகேட்டிற்கான புள்ளி வைக்கப்பட்டதை நாம்தான் முதன்முதலாக சுட்டிக்காட்டி அதனை ஆரம்பத்திலேயே சரி செய்யுங்கள் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். 

ஆனால், அப்போது தெரிந்தே வேடிக்கை பார்த்த ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடந்த ஊழல் மூலைக்கு மூலை அம்பலமான பிறகு பெயரளவுக்கு நடவடிக்கை என நாடகமாடுகிறார். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பழனிசாமி கம்பெனி யாருக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கு டெண்டர் கொடுத்தார்களோ, அதே நிறுவனத்திற்குத்தான் ஸ்டாலின் கம்பெனியும் டெண்டர் கொடுக்கிறது. அப்படி என்றால் பழைய 60:40பந்தம் இன்னும் தொடர்கிறதோ?!

மொத்தத்தில் "பழனிசாமியும் ஸ்டாலினும் ஒன்னுதான்; இதை உணராதவர்கள் வாயில் மண்ணுதான்" என்பதே எதார்த்தமாக இருக்கிறது. அமாவசையைப் பற்றி மாறி, மாறிப் பேசி அரசியல் செய்யும் இவர்கள் இருவருமே தமிழ்நாட்டு மக்களை பீடித்த அமாவாசை இருட்டுதான். இருவருமே தமிழகத்தின் எதிர்காலத்தை அமாவாசை இருட்டைப்போல ஆக்குபவர்கள்தான். ஏனெனில், 4 ஆண்டுகளாக பழனிசாமி கம்பெனி எப்படி எல்லாம் தமிழகத்தின் உரிமைகளை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை விட்டுக்கொடுத்து, தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை ஸ்டாலின் கம்பெனி. நீட் தேர்வில் விலக்கு பெறுவது உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தோல்விகளை மறைக்க புதிதாக சமூகநீதி கூட்டமைப்பு என்று கருணாநிதி காலத்து தகிடுதத்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவரது மகன் கிளம்பியிருக்கிறார்.

பொய்யிலே பிறந்து,பொய்யிலே வளர்ந்த அந்தக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வாரிசு ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் ஒவ்வொரு வேஷம் கட்டுகிறார். 'நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்' என்று ஆட்சியைப் பிடிப்பதற்காக பேசிய ஸ்டாலினின் மகன் இப்போது 'மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவதான் அந்த ரகசியம்' என்று கொஞ்சமும் வாய் கூசாமல் கூறுகிறார். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?!

இப்படிப்பட்டவர்களின் வேட்பாளர்களை உங்கள் வார்டில், உங்கள் தெருவில் வெற்றி பெற வைத்தால் என்னென்ன பேரழிவுகள் ஏற்படும் என்பதை கடைசி நேரம் வரை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். பொய்மூட்டைகளோடும், பண மூட்டைகளோடும் வரும் ஸ்டாலின் மற்றும் பழனிசாமி கம்பெனி வேட்பாளர்களைப் புறக்கணித்து, எதற்கும் விலை போகாத, லட்சியத்திற்காகவும், மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவும் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்கு "பிரஷர் குக்கர்" சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு புரியவைப்போம்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்காளர்களை மிரட்டுதல் உள்ளிட்ட அனைத்து அராஜகங்களையும் செய்வதில் கைதேர்ந்த தி.மு.கவினர் இப்போது ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தில் அவற்றையெல்லாம் இன்னும் கூடுதல் வேகத்தோடு செய்வார்கள். எனவே, நமது வேட்பாளர்களும் கழக நிர்வாகிகளும் வாக்குப் பதிவு நாளன்றும், வாக்கு எண்ணிக்கையின் போதும் கவனம் சிதறாமல் முழு விழிப்புணர்வோடு இருந்திட வேண்டும். 'எம்.எல்.ஏ., எம்.பி.தேர்தலைவிட உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று ஒருவர் வெற்றி பெறுவதுதான் கடினமானது' என்று நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அசராமல் பணியாற்றி வெற்றிகளைக் குவித்து மற்றவர்கள் வியக்கும் வகையில் மக்கள் தொண்டாற்றிடுவோம் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.