தமிழக காங்கிரஸ் கட்சித்  தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புதிய தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ள கே.எஸ்.அழகிரி, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களும் வாழ்த்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி பங்கீடு, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது உள்ளிட்டவை முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர விரும்புகின்றன. இதுதொடர்பாக திமுக தலைமையும் எங்களுடைய கட்சித் தலைமையும் கூடி முடிவெடுக்கும். எத்தனை பேர் மக்களவை உறுப்பினர்கள், எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை விட மத்திய அரசை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்காக வருத்தம் வரக்கூடிய அளவுக்கு கூட்டணி கட்சிகள் நடந்துகொள்ளாது என்றும் அழகிரி தெரிவித்தார்.

தமிழகத்திற்கு எதுவும் செய்யாத பாஜகவுடன் கூட்டணியா என்று அதிமுகவினரே அவர்களது கட்சித் தலைவர்களை பார்த்துக் கேட்கிறார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.