சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்கள் குறித்து கேள்வி எழுப்பி ஸ்டாலின் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரே வார்த்தையில் பதில் அளித்து அவர் வாயை அடைத்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்.

குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்தே திமுக இரண்டு விஷயங்களை முன் வைத்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறது. ஒன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்ட திருத்தத்த அதிமுக ஆதரித்துவிட்டது. இரண்டு இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கும் சட்ட திருத்தத்தை அதிமுக எதிர்க்கவில்லை. இந்த இரண்டை முன் வைத்தே ஸ்டாலின் ஆர்பாட்டம், பேரணி என்று செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குடியுரிமை சட்ட திருத்தம் அமலாகியுள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறி வருகிறார். மேலும் வங்கதேசத்தில் இருந்து வரும் இந்துக்கள், பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தின் படி இலங்கையில் இருந்து வரும் இந்துக்களுக்கு மட்டும் ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும் திமுக கேள்வி எழுப்பி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கூட இலங்கையில் இருந்து வரும் இந்துக்களான தமிழர்களுக்கு மட்டும் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் குடியுரிமை மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் துவக்கம் முதலே இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தான் சரியாக இருக்கும் என்று அதிமுகவின் நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துரைத்து வருகிறார்.

அதாவது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வருபவர்கள் இலங்கை குடிமக்களாக நீடிக்கும் நிலையிலும் இந்தியராகவும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. இது குறித்து ஏற்கனவே ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் கூட எழுதியுள்ளார். இதனை சுட்டிக்காட்டி திமுகவின் பிரச்சாரத்தை அதிமுக எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியம் இல்லாது என்று திமுக கூறி வருகிறது.

இந்த நிலையில் சட்டபபேரவையில் இன்று இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை விவகாரம் எழுப்பப்பட்டது. இதன் மீது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வழக்கம் போல் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஈழத் தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டதாக கூறினார். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது எப்படி சாத்தியமாகும், அது நடக்கவே நடக்காத ஒன்று என ஸ்டாலின் கூறினார்.

அப்போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் எழுந்து இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு பதில் அளிக்க அனுமதி கோரினார். சபாநாயகர் அதற்கு அனுமதி அளித்தார். அப்போது பேசிய பாண்டியராஜன், இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமான ஒன்று தான் என்றார். ஏற்கனவே ஒரு லட்சம் பேர் இந்தியராகவும் வேறு ஒரு நாட்டின் குடிமகனாகவும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என நான்கு நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் பிறந்த ஒருவர் அந்த நான்கு நாடுகளில் ஒன்றில் குடியுரிமை பெற்று இருந்தாலும் இந்தியராகவே கருதப்படுவார் என்பதை பாண்டியராஜன் சுட்டிக்ககாட்டினார். இதே போல் மத்திய அரசு இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் போதும், ஈழத் தமிழர்களால் இந்திய குடியுரிமை பெற முடியும் என்றார். இந்த விவகாரத்திற்கு யாரும் பதில் அளிக்க முடியாது என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். ஆனால் பாண்டியராஜன் இப்படி உதாரணத்தோடு கூறிய பதிலால் அதற்கு மேல் இந்த விவகாரத்தில் ஸ்டாலினால் எந்த கேள்வியும் கேட்க முடியாமல் வாயடைத்துப்போனதை பார்க்க முடிந்தது.