தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான் என்றும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் அவதரித்த மண் என்றும் நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் பிரவேசத்துக்கு பாராட்டு தெரிவிப்பதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 

இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும், தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யாவிட்டால், சாகும்வரை அந்த குற்ற உணர்வு எனக்குள் இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரஜினி கூறியிருந்தார். ஆன்மீக அரசியல் என்றால், நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து கி. வீரமணி பேசும்போது, ரஜினி ஆன்மீக அரசியல் என்று சொல்வது அவருடைய குழப்பத்தைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார். ஆன்மீகத்தையும், அரசியலையும் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும், முதலில் அவருடைய ஆன்மீக அரசியலை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி, இந்த பகுத்தறிவின் வேர்களை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அந்த சக்திகளை காலூன்றாமல் தடுப்பது எங்களது பணியாக எதிர்காலத்தில் அமையும் என்றும் கி.வீரமணி கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்ற ரஜினிக்கு ஆதரவாக, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான் என்றும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் அவதரித்த மண் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து என்றும், ரஜினியின் ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது என்றும் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.