எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அதிமுக இளைஞர் பாசறை மாநில துணைச்செயலாளர் விஷ்ணு பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற சட்டமன்ற  தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை  தெரிவித்து வந்தனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று கூறினர். அதேநேரம் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார்  உள்ளிட்டவர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், கட்சி தலைமை கழக நிர்வாகிகள் இதுபற்றி அறிவிப்பார்கள் என்றும் கூறி வருகிறார்கள். இதனால், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2021ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியே தமிழக முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி அதிமுக இளைஞர் பாசறை மாநில துணைச்செயலாளர் விஷ்ணு பிரபு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தி வருகிறார். இதற்காக கோயம்பத்தூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் இறங்கி அவர் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டுள்ளார். 

இன்னும் சில நிமிடங்களில் சிறப்பு யாகம் தொடங்க உள்ளது. சுதர்சன யாகம் சுமார் 2 மணிநேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாகத்தின் முக்கியத்துவமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் 2021 முதல்வராக வேண்டும் என்பதற்காக தான் இந்த யாகம் நடத்துவதாக  இளைஞர் பாசறை மாநில துணைச்செயலாளர் விஷ்ணு பிரபு தெரிவித்துள்ளார்.