Special Story About TTV Dinakaran
’ஷெரீனா பானு’_வை மறக்க முடியுமா?! மலேஷியன் ஏர்லைன்ஸின் ஏர்ஹோஸ்டஸ் போலிருக்கும் இந்த மதுரை பொண்ணு மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போட்டு, தமிழக அரசியலை வேறு தளத்துக்கு கொண்டு போனது அ.தி.மு.க. அரசு. யாருக்காக ஏன் எப்படி இந்த வழக்கு என்பதெல்லாம் ஊரறிந்த ’சிதம்பர நாயகன்’ ரகசியம்.
அந்த ஷெரீனா மட்டுமா நடிகர் திலகத்தின் வீட்டு மாப்பிள்ளைக்கே கூட அந்த கதிதான். இப்படி ஜெ., ஆட்சியில் கஞ்சா வைத்து பிடிக்கப்பட்ட தலைகள் ஏராளம்.
சரி, எதற்காக இந்த ஃபிளாஸ்பேக் என்கிறீர்களா? தன் இழுப்புக்கு ஒத்துவராத நபர்களை வளைக்கவும், தன் மனசுக்கு எரிச்சலை தரும் நபர்களை முடக்கவும் அதிகாரத்திலிருப்பவர்கள் சில யுக்திகளை பயன்படுத்துவார்கள். அந்த யுக்திகள் சில நேரம் கஞ்சா போன்ற பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது சுகாஷ் போன்ற மனிதர்களாகவும் இருக்கலாம். கஞ்சா மூலம் ஷெரீனா வீழ்த்தப்பட்டது போல், சுகாஷ் மூலம் அ.தி.மு.க. வளைக்கப்படுகிறது என்பதே தேசிய அளவில் பார்வையை விஸ்தரிக்கும் அரசியல் விமர்சகர்களின் கருத்து.

இதில் கவனிக்க வேண்டிய காமெடி என்னவென்றால், அன்றைக்கு ஷெரீனாவால் அ.தி.மு.க. அரசை எதிர்த்து ஜெயிக்க முடியவில்லை. இன்றோ அ.தி.மு.க.வால் டெல்லியை எதிர்த்து போராட கூட முடியவில்லை. கஞ்சா வழக்கு போடும் நம் மீது ஹவாலா வழக்கு போடவும் ஒருத்தன் வருவான் என்று அ.தி.மு.க. அன்று கணிக்காதது விதி செய்த சதி என்கிறார்கள் இந்த விமர்சக வித்தகர்கள்.
அப்படியானால் தினகரன் அப்பாவியா?...அரசியல் வழக்குகளை பொறுத்தவரை குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்களை விட சூழ்நிலைகள்தான் ஒருவரை குற்றவாளியா, அட்லீஸ்ட் ஜாமீனுக்காவது தகுதியான குற்றவாளியா என்பதையெல்லாம் தீர்மானிக்கின்றன. தினகரனை பொறுத்தவரையில் அவர் இந்த மூன்றாவது கேட்டகிரிக்கு தகுதியற்றவர் என்றே தீர்மானித்திருக்கிறது டெல்லி. காரணம் தமிழகத்தின் அரசியல் சூழல் அப்படி.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட சிறிய வெற்றிடத்தை அ.தி.மு.க.வினுள்ளே மூண்ட பங்காளிசண்டை தோண்டி தோண்டி அதல பாதாளமாக்கியது. பதவிக்கான பந்தயத்தில் பைபாஸில் வந்து முந்துவதும் அரசியல் அறமே என்பதை ஏற்க மறுக்கும் எதிர்கட்சி தலைவரோ வெற்றிடத்தின் விட்டத்தை தாறுமாறாக விஸ்தரித்திருக்கிறார். விளைவு, இத்தனை நாட்களாக தமிழக முதல்வர் நாற்காலியை எட்டி நின்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தேசிய கட்சிகள் சற்றே பக்கம் வந்து தடவிப் பார்க்க துவங்கியுள்ளன.
அதில் ஒரு இயக்கம் அதிகார மிடுக்குடன் நாற்காலியை உரசியே பார்க்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆளுங்கட்சியை கட்டாய காதலுக்கு வற்புறுத்திப் பார்த்தது அந்த தேசிய கட்சி. ஆனால் அதன் தலைமை ஒத்துவரவில்லை. காரணம், இன்று நட்பாக தங்கள் தலையை நீட்ட அனுமதித்தால் நாளைக்கு மொத்த கூடாரத்தையும் அமுக்கி ஆண்டுவிடுவார்கள் என்கிற பயம்தான். ஆக அ.தி.மு.க.வின் தலைமையாக இருந்தவர் இணங்காத காரணத்தினால் வழக்கு, கைது, ஹவாலா என்று தலைநகரம் கதை வாசிப்பதாக போட்டுத் தாக்குகிறார்கள் அதே அரசியல் நோக்கர்கள்.

சரி, தினகரன் குற்றவாளியா? என்கிற விஷயத்துக்குள் மீண்டும் வருவோம். இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதே தினகரன் மீதான குற்றச்சாட்டு. லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன், மீடியேட்டராக செயல்பட்ட சுகாஷ், தினகரனுக்கு உதவிய மல்லிகார்ஜூனா என்று கைதுகள் அரங்கேறியதே!...தேர்தல் கமிஷனின் எந்த அதிகாரியை அவர்கள் குறி வைத்தார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை? அட்லீஸ் ஈ.சி.யின் எந்த பதவியிலுள்ள அதிகாரிகளை குறிவைத்தார்களென்றாவது கூறலாமே. டெல்லி போலீஸ் பிடித்திருக்காவிட்டால் தினகரன் டீம் லஞ்சத்தை கொடுத்திருக்குமென்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியென்றால் லஞ்சம் பெற துணியும் அல்லது பெறும் வழக்கமுடைய கைசுத்தமற்ற நபர்கள் ஈ.சி.யில் இருக்கிறார்கள் என்று டெல்லி போலீஸை நிர்வகிக்கும் மத்திய அரசு சொல்ல வருகிறதா? இது உண்மையா! இதற்கு ஏன் ஈ.சி. தரப்பிலிருந்து இப்போது வரை விரிவான விளக்கமில்லை! அப்படியானால் இதுவரை எத்தனை தேர்தல்களில் தேர்தல் கமிஷனிடம் என்னென்னவெல்லாம் காசு கொடுத்து சாதிக்கப்பட்டிருக்கிறது?
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் தேர்தல் கமிஷனின் அதிகாரிகளுக்கு இப்படியான லஞ்சங்கள் கொடுக்கப்பட்டு பா.ஜ.க.வோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ ஆதாயம் தேடினார்களா? என்று எதிர்கட்சிகள் கேட்பதற்கு பதிலே இல்லையே ஏன்?
அப்படியானால் அ.தி.மு.க.வின் சில வி.ஐ.பி.க்கள் குற்றம் சாட்டுவது போல் தங்கள் கட்சியை கைப்பற்ற அல்லது தங்களை அடக்கி அடிமையாக்கி அதன்மூலம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றத்தான் இந்த மூவ்களெல்லாம் நடக்கின்றனவோ என்று சாடுவது யோசிக்க வைக்கிறது. தினகரன் பார்க்க சாதுவாக இருந்தாலும் அரசியல் சாணக்கியன்.
தங்களின் முயற்சிக்கெல்லாம் தடையாக இருப்பார் எனும் நோக்கில் அவரை முடக்கத்தான் இம்மாதிரியான வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன என்றும் அவர்கள் கொதிக்கிறார்கள்.
என்ன நடந்தாலும் அ.தி.மு.க.வை அபகரிக்க முடியாது! என்று தேசத்தை ஆளும் கட்சியை நோக்கி உருமும் ஜெயலலிதாவின் வளர்ப்புகளை பார்க்கும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய? கஞ்சாவை விதைத்தவர்கள் ஹவாலாவை அறுவடை செய்கிறார்கள். விதி!
