ஊருக்கெல்லாம் குறி சொல்லும் பல்லி, கழனி பானையில் விழுந்துவிடுவது போல், ஊருக்கே உபதேசம் செய்யும் பலர், தங்கள் நிஜ வாழ்வில் அதற்கு எதிராக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

சுயமரியாதை, பகுத்தறிவு, ஜாதி-மத மறுப்பு என மேடைக்கு மேடை முழங்கி வரும், திருச்சி சிவாவும் அப்படியா? என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

திமுகவின் மிகச்சிறந்த பேச்சாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவிடமிருந்து, தமக்கும் தமது காதல் மனைவிக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி, அவரது மகனே செய்தியாளர்கள் மத்தியில் கதறிய சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பிரதியுஷா என்ற பெண்ணை காதலித்து, தந்தையின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருச்சி சிவா முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், அவரது மருமகளோ கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.

இந்த கலப்பு சாதி திருமணத்தில்  கொஞ்சமும் விருப்பம் இல்லாத திருச்சி சிவா, அவர்களை பிரிக்க தொடர்ந்து பல இடையூறுகளை செய்து வருவதுடன் மிரட்டியும் வந்திருக்கிறார்.

அது எதுவும் பலன் தராமல் போகவே, ஒரு கட்டத்தில், என் மகனை விட்டு பிரிந்து போய்விடு, இல்லை என்றால், நீ வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு, விபச்சார வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று, சிவா தூண்டுதலின் பேரில் சில போலீசார், பிரதியுஷா வீட்டுக்கு சென்று மிரட்டி உள்ளனர்.

இதனால், அதிர்ந்து போன சிவாவின் மகன் சூர்யா சிவா, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து, தமது காதல் மனைவியுடன் வாழ, தந்தை சிவாவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கதறி இருக்கிறார்.

இது, திமுக வட்டாரத்தில் மட்டுமன்றி, ஒட்டு மொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று கட்சியினராக இருந்தாலும், திருச்சி சிவா மீது மற்ற கட்சியினருக்கும் அவரது, பேசிச்சுத்திறன் மற்றும் எழுத்தாற்றல் மீது ஒரு ஈர்ப்பும், மரியாதையும் உண்டு.

அவரது மனைவியின் இறப்பை அடுத்து, அவர் நாளேடு ஒன்றில் தமது மனைவியை பற்றி மனைவியுடன் பேசுங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதி உருக்கமான கட்டுரையை படித்துவிட்டு, உருகாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். 

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, டெல்லியில் அவரும் மற்றொரு பெண் எம்.பி யும், சேர்ந்து கும்மாளம் அடித்தது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அவரது உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில், அவரது மகனே, ஜாதி-மதத்தை காரணம் காட்டி, தமது வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார் என்று, செய்தியாளர்கள் மத்தியில் வெளிப்படையாக கதறுவதை பார்த்து, திருச்சி சிவாவின் மீது கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையும் போய் விட்டது என்கின்றனர், அரசியல்வாதிகளும் பொது மக்களும்.

எனவே, திருச்சி சிவா மேடைக்கு மேடை முழங்கும் சுய மரியாதை, பகுத்தறிவு, ஜாதி-மத மறுப்பு எல்லாமே ஊருக்குதான் உபதேசமா? என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

அனைத்துக்கும் பதில் சொல்லும் திருச்சி சிவா, இந்த விவகாரத்திற்கு என்ன பதிலை சொல்லப்போகிறார்  என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.