ஜனநாயகத்தின் ஆகப்பெரிய அழகே ‘போராட்டங்கள்’தான். ஜனநாயக தேசமான இந்தியாவினுள் அடங்குவதாக இன்று வரை கருதப்பட்டுக் கொண்டிருக்கும் (!?) தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு தடை என்பது அடிப்படை உரிமைகளை அமுக்கி நசுக்கும் செயலென் கொதிக்கிறார்கள் விமர்சகர்கள். இதைப்பற்றி விரிவாக பேசுபவர்கள்...

ஓய்வூதிய முறையில் மாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். போராட்டக் குழுவிடம் அமைச்சர்கள் பேசி பலனில்லாத நிலையில், ஈரோட்டில் முதல்வர் பேசினார். விளைவு போராட்டக் குழுவில் ஒரு பிரிவினர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் அமைப்பில் பிளவு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் சமாதானமாக நபர்கள் வேலை நிறுத்தத்தை தொடரும் நிலையில்...’தார்மீக அடிப்படையில் வேலை நிறுத்தம் செய்வதை ஒரு அடிப்படை உரிமையாக கருத முடியாது,

போராட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முடியாது. வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய தேவைகள் பணி பாதிப்படைய கூடாது. ஆக மொத்தத்தில் அரசு விதிகளுக்கு முரணாணது வேலை நிறுத்தம்.” என்று உச்சநீதிமன்றம் ஒரே போடாக போட்டிருப்பதை காட்டி போராட்டக் காரர்களை பயமுறுத்துகிறது.

இருந்தாளும் “நாங்கள் அத்தியாவசிய செயல்பாடுகளை தடுக்கவில்லை. சாத்வீகமாகதான் போராடுகிறோம்.” என்று சொல்லி களமிறங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா சட்டம், டெஸ்மா சட்டம் போன்ற கடும் அடக்குமுறை சட்டங்கள் பாயும் என்று மீசை முறுக்குகின்றார்கள் ஆளும் நபர்களும், காவல்துறையினரும். 

அதேபோல் நீட் விவகாரத்திலும் அந்த தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் அரசியலமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று பல தரப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையும் கண்டித்து ‘நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. சட்ட ஒழுங்கிற்கு இடையூறு செய்யக்கூடாது.’ என்று உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காட்டி நீட் _ க்கு எதிரான எல்லா போராட்டங்களுமே முடக்கப்படுவதாக குமுறுகிறார்கள் எதிர்கட்சியினரும், மாணவர்கள் அமைப்பினரும். ஆனால் நீதிமன்ற உத்தரவு எனும் லத்தியை கையிலெடுத்து போராட்டக்காரர்களுக்கு எதிராக பெரும் வீச்சோடு சுழற்றுகிறது அரசு. 

தமிழகத்தில் போராட்டங்களுக்கு எதிராக மூண்டிருக்கும் இந்த போர் மேகம் ஒரு அசாதாரண நிலையை தோற்றுவித்துள்ளது. “எவன் போராட வருவான்? ஒரு சட்டத்தால், ஒரு திட்டத்தால் பாதிக்கப்பட்டவந்தான் போராட வருவான். தனக்கான பிரச்னையை பல முறை சொல்லி அழுதும் பயனில்லை எனும் நிலையில்தான் அவன் வீதிக்கு வருவான். வீதியில் போராடினால்தான் கோட்டை வரை எதிரொலிக்கும் என்பது யதார்த்த சிந்தனை. ஆனால் இவற்றுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு எனும் கேடயத்தை நீட்டி தடுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் உத்தரவிடும் முன் கொஞ்சம் மக்களின் உணர்வுகளை ஆழமாக சிந்திக்க வேண்டும். அரசு மற்றும் ஆசிரியர்கள் ஊதியம் அதிகமாக கேட்டு மட்டும் போராடவில்லை! மாதாமாதம் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் கணிசமான சதவீத பணத்தை அரசு எங்கே முதலீடு செய்துள்ளது என்பதே தெரியாத சூழல் இருக்கிறது. இதை பல முறை கேட்டும் பதில் இல்லாததால்தான் போராட்டத்துக்கு வந்தார்கள். 

நீட் கொடுமையின் விளைவை நாம் சொல்லி நீதியரசர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில்லை. சட்ட ஒழுங்கு பாதிப்பு என்பதை காரணம் காட்டி போராட்டத்தை ஒரு மூலையில் மட்டுமே நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டால் , அந்த  கோரிக்கை எந்த சூழலிலும் வெற்றி பெறாது. ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்து இப்பவோ அல்லது அப்பவோ என்று கிடக்கிறது. ஆளும் நபர்களுக்கு அரசை காத்துக் கொள்வதில்தான் முழு கவனமும் வைத்திருக்கிறார்களே தவிர மக்கள் பிரச்னையில் இல்லை. இந்த சூழலில் போலீஸ் வரைந்து கொடுத்த சாக்பீஸ் கட்டத்துக்குள் நின்று குரல் கொடுத்தால் கோட்டைக்கு கேட்கவே கேட்காது, பிரச்னைகள் தீரவே தீராது. 

போராட்டம் என்பது சுதந்திர இந்தியாவின் அடிநாதம். சுதந்திரம் பெற்றதே இப்படியான போராட்டங்களினால் தானே! எனவே பிரச்னையை சொல்லு ஆனால் போராடாதே என்று சொல்வது மா தவறு. வெற்றி கிட்டும் வரை போராடாதே! என்பதா ஜனநாயகம்? என்று கேட்கிறார்கள்.