Special article about dindukal srinivasan
சமாளிப்புத் திறமை என்ற நினைப்பில் நேரத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம்; யார் என்ன கேட்டுவிடப் போகிறார்கள் என்ற எண்ணம் அரசியல்வாதிகள் மத்தியில் தலைத்தோங்கி இருப்பதை அதிமுக அமைச்சர்கள், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தினமும் நிரூபித்து வருகின்றனர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதையே அவர்களின் கருத்தாக தான்தோன்றித் தனமாக பேசி வருகின்றனர். அன்று அப்படி பேசினோமே.. அதற்கு முற்றிலும் முரணாக இன்று இப்படி பேசுகிறோமே என்ற உறுத்தலோ கூச்சமோ கூட இல்லாமல் பேசுவதை பார்க்க முடிகிறது. ஒருவேளை என்ன பேசுகிறோம் என்பது தெரிந்தால்கூட யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற எண்ணமா? அல்லது நாம் மாற்றி மாற்றி, மாறி மாறி பேசுவதால் நமக்கு என்ன நஷ்டம் என்ற அலட்சியமா? என்று தெரியவில்லை.
குறிப்பாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் தொடக்கம் முதலே முரணாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் நடந்த அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாவின் குடும்பம்தான் காரணம் என பேசியுள்ளார். 75 நாட்களாக மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை. அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என பேசினார். ஜெயலலிதாவைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்திருந்தால் சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் நோய் முற்றட்டும் என விட்டதால்தான் இறந்துவிட்டார். யாரையாவது பார்க்கவிட்டால் ஜெயலலிதா உண்மையை கூறிவிடுவார் என்பதலாயே யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகத்தை எழுப்பியபோது, இதே திண்டுக்கல் சீனிவாசன் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மதுரை மாவட்டம் பேரையூரில் பேசியபோது, மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா அவருக்குப் பிடித்தவர்களை பார்த்ததாகப் பேசினார்.
மேலும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட அவரிடம் தான் அனுமதி கோரியதாகவும் அதற்கு இப்படியொரு நிலையில் தனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் எனவும் இன்னும் சில தினங்களில் தான் குணமாகி வந்துவிடுவதாக ஜெயலலிதா கூறியதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது யாரையுமே பார்க்க அனுமதிக்கவில்லை என தற்பொழுது கூறும் திண்டுக்கல் சீனிவாசன், தான் பார்த்ததாக அன்று கூறியது பொய்யா? அல்லது யாருமே பார்க்கவில்லை என தற்பொழுது கூறுவது பொய்யா? எப்படி பார்த்தாலும் ஏதோ ஒன்று அப்பட்டமான பொய்.
தனது கருத்திலிருந்து தானே முற்றிலும் முரண்பட்டு பேசுவது என்பது மிகவும் அபத்தமானது… மட்டுமல்லாமல் ஆபத்தானதும்கூட..
தங்களின் தாரகைத் தலைவியாகவும் அம்மாவாகவும் ஜெயலலிதாவைக் காட்டிக்கொண்ட தற்போதைய அமைச்சர்கள், தற்போது அவரை வைத்தே… அதுவும் அவரது மரணத்தை வைத்தே அரசியல் செய்வதற்கு நாண வேண்டும்.
