Special Article about Anitha for DMK and Sasikumar for BJP
தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையில் ஒரு கருத்து யுத்தமே நடந்து வருகிறது. என்னதான் இங்கே ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும் கூட எதிர்கட்சியான தி.மு.க. கடந்த சில வாரங்களாக அரசியல் செய்வதென்னவோ பா.ஜ.க.வை எதிர்த்துத்தான். ’பா.ஜ.க.வின் கைப்பாவையான அ.தி.மு.க.வை திட்டுவதை காட்டிலும், அதை ஆட்டுவிக்கும் பா.ஜ.க.வை விமர்சிப்பதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும்?’ என்று வெளிப்படையாகவே சாடுகிறார்கள் கழக பேச்சாளர்கள்.
ஆளும் அ.தி.மு.க.வுக்கு இதைவிட பெரிய அவமானம் என்ன வேண்டும்? இந்த தேசத்திலேயே மூன்றாவது பெரிய அரசியல் இயக்கமாக வெறும் மாநில கட்சியான அ.தி.மு.க.வை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவுக்கு அக்கட்சியின் தலைமை நிர்வாகிகளும், அமைச்சர்களும் செய்திருக்கும் ஆகப்பெரிய மரியாதையல்லவா இது!
சரி இது ஒரு புறம் இருக்கட்டும், நாம் விஷயத்துக்கு வருவோம்.
தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையில் நடக்கும் போரில் கடந்த சில நாட்களாக ஸ்டாலினும், ஹெச்.ராஜாவும் நேருக்கு நேர் அறிக்கை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். சாரணர் அமைப்புத் தேர்தலில் ஹெச். ராஜா போட்டியிடுவதை எதிர்த்து ஸ்டாலின் இன்று கண்டனம் வெளியிட்டிருந்தார். அதில் “ஹெச். ராஜாவை சாரண_சாரணியர் இயக்க தலைவராக நியமிக்கும் முயற்சி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாணவர்களிடம் காவி கொள்கையை புகுத்த பா.ஜ.க. அரசு நினைக்கிறது.” என்று அதில் வறுத்திருந்தார்.
இதற்கு அதிரடி பதில் தந்திருக்கும் ஹெச்.ராஜா...”என்னை சாரணர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமையில்லை. வரும் 16_ம் தேதி நடைபெறும் சாரண, சாரணியர் அமைப்புத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். சாரண, சாரணியர் அமைப்பினர் கேட்டுக் கொண்டதால்தான் நான் போட்டியிடுகிறேன். என்னை தடுக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.
ஹெச்.ராஜாவின் இந்த பதிலடியை பா.ஜ.க.விலுள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதேவேளையில் அனிதா தற்கொலைக்குப் பின் நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் தொடுக்கும் மத்திய அரசுக்கு எதிரான போரை விமர்சித்து ‘பிணத்தை வைத்து அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின்.’ என்று தாளித்திருந்தார் ஹெச்.ராஜா.
தி.மு.க.வை அதிகமாக உரசிப்பார்த்த ராஜாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்க துவங்கியிருக்கும் அக்கழக பேச்சாளர்கள், “அப்படியானால், அன்று கொல்லப்பட்ட இந்துமுன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிக்குமாரின் பிணத்தை வைத்துக் கொண்டு கூடத்தான் நீங்கள் அரசியல் செய்தீர்கள். இத்தனைக்கும் அவர் இந்துமுன்னணிக்காரர். இந்து முன்னணியினரை உங்களது அரசியல் வளர்ச்சிக்காகவும், தேர்தல் பணிக்காகவும் மட்டுமே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் மற்றபடி அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் தருவதில்லை என்று அந்த அமைப்பே வெளிப்படையாக உங்களை விமர்சித்திருக்கிறது பல முறை.
அப்பேர்ப்பட்ட அமைப்பை சேர்ந்த சசிக்குமாரின் பிணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் அரசியல் செய்தீர்கள்? தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சசிக்குமாரின் வீட்டிற்கு போய் நின்று ஆறுதல் சொன்னதும், கொலையாளிகளை இந்த மாநில அரசு உடனடியாக பிடித்தே தீரவேண்டும் என்று நீங்களெல்லாம் கூக்குரலிட்டதும் ஏன்? அது பிணத்தின் மேல் நடந்த அரசியலில்தானே!
இப்பேர்ப்பட்ட உங்களுக்கு எங்கள் தளபதியையோ, கழகத்தையோ பற்றி பேச எந்த அருகதையுமில்லை.” என்று குமுற துவங்கியுள்ளனர் கழக கூட்டங்களில்.
அரசியல் மேடையில் இந்த இரண்டு பயில்வான்களுக்கும் இடையில் நடக்கும் ஆக்ரோஷ மோதலை மிச்சர் தின்றபடி பார்த்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க!
