தமிழகத்தில் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2008 முதல் மாநகராட்சியாக ஈரோடு தரம் உயர்த்தப்பட்டது. ஈரோட்டில் ரூ.104 கோடி மதிப்பில் 66 மக்கள் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.45 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ஈரோடு தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என ஈரோட்டில் கொண்டு வந்துள்ளன நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு பொய் சொல்வது என்பது கைவந்த கலை. எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்தது. பொள்ளாச்சி சம்பவம், கோடநாடு வழக்கு, நீட் வழக்கு என பலவற்றிலும் பொய் கூறியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே கிராமப்புற தேர்தலில் 60% க்கும் அதிக இடங்களில் வெற்றபெற்றோம். அதிமுக வெற்றி பெற்றால் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சேரவிடாமல் தடுப்பார்கள். தமிழகத்தில் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம். திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்ற திமுக உழைத்து வருகிறது. தமிழர்களின் பண்பாட்டுக்கு உகந்தது எது என்பதை உணர்ந்து இயக்கம் திமுக என தெரிவித்தார்.
