நோட்டீசு அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார். 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்கும் முயற்சிகளை அதிமுக மேற்கொண்டிருப்பதால் தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.


இந்நிலையில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பணத்தைத் தண்ணீராய் செலவழித்தாலும் அதிமுகவுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்.
அதனால்தான் ஆட்சியைத் தக்க வைக்க குறுக்கு வழியில் முயற்சி செய்கின்றனர். அதற்கு சபாநாயகரும் துணை போகிறார். தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. இதற்கு முன்பு ரத்தினசபாபதியும் கலைச் செல்வனும் அதிமுக அம்மா அணியில் இருந்தவர்கள். சசிகலா தலைமையில் ஓர் அணியாகச் செயல்பட 20 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தோம். அதில் இவர்கள் இருவரும் கையெழுத்து போட்டார்கள்.
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படிதான் இரு எம்எல்ஏக்களும் செயல்பட்டுவருகிறார்கள். தற்போது இந்த 3 எம்எல்ஏக்களும் அமமுகவில் உறுப்பினராக இல்லை. அதிமுகவில்தான் இருந்துவருகிறார்கள். அதனால், இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது சபாநாயகர் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதையும் மீறி தகுதிநீக்கம் செய்தால் 6 மாதத்தில் தேர்தலை சந்திப்போம்.”
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.