Asianet News TamilAsianet News Tamil

சபாநாயகர் தனபால்தான் முதல்வராக வேண்டும்: திவாகரன் அதிரடி!

Speaker Dhanapal will be the Chief Minister
 Speaker Dhanapal will be the Chief Minister
Author
First Published Aug 22, 2017, 3:13 PM IST


சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் நீண்ட நாள் இழுபறிக்குப் பிறகு, அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஒன்றாக இணைந்தது. இந்த இணைப்பால், அதிமுக தொண்டர்கள் உற்காசமடைந்ததாக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கூறி வந்தனர். 

இந்த இணைப்பின் மூலம், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.

இந்த இணைப்பு கொண்டாட்டத்தின்போது, விரைவில் பொதுக்குழு கூட்டி, சசிகலா நீக்கப்படுவார் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்காசமடைந்தனர்.

ஆனால், டிடிவி தினகரன் தரப்பினர் கடும் கோபத்துக்கு ஆளாகினர். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்றும், அவருக்கு இதுவரை வழங்கப்பட்ட ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், ஆளுநரிடம் டிடிவி அணியினர் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

திருவாரூரில், செய்தியாளர்களை திவாகரன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். அமைச்சரவையைக் கேட்டு முடிவெடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. பொறுப்பு ஆளுநரை மத்திய அரசு
வைத்திருப்பதால்தான் பல சித்து விளையாட்டுகள் நடக்கின்றன.

மு.க.ஸ்டாலின், கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அவர் தரம் தாழ்ந்த அரசியல் செய்ய மாட்டார்.

இருப்பினும், திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு கேட்டால், ஆதரவு அளிப்போம்.

ஆனாலும், 4 ஆண்டுகளை இந்த அரசு பூர்த்தி செய்யுமா என்பதை உத்தரவாதமாக சொல்ல முடியாது. சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும். இவ்வாறு திவாகரன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios