16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த இசையரசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.04 மணி அளவில் நம்மை எல்லாம் விட்டு மறைந்தார். 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் எமனுடன் போராடி வந்த எஸ்.பி.பி. , அனைவரையும் ஏமாற்றிவிட்டுச் சென்றது ஏற்க முடியாத துயரமாக மாறியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை அரசியல் கட்சியினரும், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர் என பல்லாயிரக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து சுமார் 3.30 மணிக்கு மேல் மருத்துவமனையிலிருந்த எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பறந்து சென்ற பாடும் நிலாவை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டுமென ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

நாளை  சென்னையை ஒட்டிய செங்குன்றத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் காலை 11 மணி அளவில் அவரது உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக  நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து பண்ணை வீட்டிற்கு உடல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.  நாளை அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்பாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. 

இந்நிலையில்,  மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மத்திய - மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க:  எஸ்.பி.பி பற்றி பலருக்கும் தெரியாத சூப்பர் விஷயங்கள்... அரிய போட்டோஸுடன் அசத்தல் தகவல்கள் இதோ!

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு திரையுலகினர், ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.