பாஜகவை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி சோபியாவின் ஜாமீனை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி சோபியாவின் ஜாமீனை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு சென்றார். 
அப்போது விமானத்தில் அவருடன் பயணம் செய்த இளம்பெண், கனடாவில் ஆராய்ச்சிப் படிப்பை படித்துவரும் தூத்துக்குடி மாணவி சோபியா, திடீரென பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கமிட்டார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தமிழிசை அளித்த புகாரின்பேரில், போலீசார் சோபியாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையொட்டி, உடல்நிலை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவருக்கு, தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. பின்னர், சோபியா வீடு திரும்பினார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சோபியாவின் செயலுக்கு மிகப்பெரிய பின்னணி இருப்பதாகவும், அவரது ஜாமீனை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வித்துள்ளார்.
