வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்து வருவதாகவும், தமிழகத்தில் இருந்து முற்றிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்றும், தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:  

வரும் தேர்தலை முன்னிட்டு 234சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் சுற்றுபயணம் மேற்கொண்டு தேர்தல் அலுவலகம் திறப்பது. பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்கிறோம். வரும் 25ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மிக பிரமாண்டானா பொதுகூட்டம்  கோவையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்து கொண்டு வருகிறோம். 

புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியை சீராக கொண்டு செல்லவில்லை என்பதை உண்மை, அதனால்தான் அவர் கட்சியை சேர்ந்தவர்களே ராஜினாமா செய்தார்கள். புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததற்கும் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பெட்ரோல் டீசல் விலை ஏற்றதை மத்திய அரசும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு உள்ளது. சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும். 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை. இக்கட்சி இருக்கும் இடத்தில் ராகுல் காந்தி சென்று வருகிறார், விரைவில் அதுவும் காணாமல் போகும். தமிழக அரசு ஏராளமான பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அதனை மக்களிடம் கொண்டு  செல்லவே விளம்பரம் செய்யப்படுகிறது. அதில் என்ன தவறு உள்ளது என்றார். எத்தனை இடங்களில் போட்டி என்பதை விட எத்தனை இடங்களில் வெற்றி என்பதை எங்கள் நோக்கம். இவ்வாறு முருகன் கூறினார்.