அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். 

மறைந்த திமுக தலைவரும், 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்தவருமான கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அவரது விருப்பத்தின்படியே, மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் மறைவை அடுத்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலையை நிறுவ திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. கருணாநிதியின் வெண்கல சிலை, திருவள்ளூர் அருகே வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை விரைவில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி வாக்கில் சிலை நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங். தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், டெல்லி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை நிறுவப்படுவது குறித்து விரைவில் அழைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.