ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (யுபிஏ) தலைவராக இருக்கும் சோனியா காந்தி உடல் நிலையை கருத்தில் கொண்டு அப்பதவியிலிருந்து விலக உள்ளார். எனவே, அடுத்த தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க முன் வராத நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கூட்டணியில் உள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.


“தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இந்தப் பதவியைப் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அவர் அந்தப் பதவியை தனிப்பட்ட முறையில் மறுத்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. பவார் ஒரு மிகப் பெரிய தலைவர். அதுபோன்ற ஒரு திட்டம் வந்தால், நாங்கள் சரத் பவாருக்கு ஆதரவளிப்போம். காங்கிரஸ் இப்போது பலவீனமாக உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம்” என்று தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004, 2009 என இரு தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2014, 2019 என இரு தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.