டெல்லியில் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஒரு சந்திப்பு எதுவும் இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.


 நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிந்துவிட்டது. மே 23 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக கூட்டணிக்கு 200-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. அதையொட்டி காங்கிரஸோடு சேர்ந்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைக்கும் பணிகளை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சி  தலைவருமான சந்திரபாபு மேற்கொண்டுள்ளார்.
நேற்று மட்டும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, மாயாவதி, அகிலேஷ் என தலைவர்களை மாறிமாறி சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அதன் காரணமாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காங்கிரஸ் முன்னாள்  தலைவர் சோனியாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசுவார் என நேற்று பிற்பகலில் தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் இல்லாததால், மே 23-ம் தேதி முடிவுக்காக காத்திருக்கும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே சோனியா காந்தியை மாயாவதி சந்திப்பார் என்று வெளியான தகவல்களுக்கு மாறான தகவல்  தற்போது வெளியாகி உள்ளது.
சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி எஸ்.சி. மிஸ்ரா அறிவித்துள்ளார்.  “மாயாவதிக்கு டெல்லியில் எந்தச் சந்திப்போ அல்லது வேறு நிகழ்ச்சிகளோ கிடையாது” என்று தெரிவித்துள்ளார். சோனியாவுடன் மாயாவதி சந்திப்பு என்ற செய்தியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சந்திப்பு மறுக்கப்பட்டதால், இன்று டெல்லியில் அரசியல் நகர்வுகள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. 
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.