தன்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன் - ஆளுநர் தமிழிசை
வேலையே இல்லாததால் சிலர் என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை நினைத்து நான் பரிதாபப்படுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணைநிலை ஆளுநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள், மருந்துகளின் காலக்கெடு மற்றும் அனைத்து மருந்துகளும் 2024, 2025 ஆம் ஆண்டு காலக் கெடுவோடு இருப்பதையும் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தும் தரமான மருந்துகள் என்பதையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.
இரவு நேரங்களில் மருத்துவர்கள் தேவை என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முழுநேர மருத்தவர்கள் நியமனம் செய்யப்படும் வரை முதுகலை பயின்ற பயிற்சி மருத்துவர்கள் இருவரை உடனடியாக பணியமர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அனைத்து வகையான சிகிச்சை முறைக்கும் உபகரணங்கள் மற்றும் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தித் தரவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உடன் இருந்தனர்.
சேலத்தில் கிணற்றில் குதித்த மகள், காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி பலி
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர், புதுச்சேரியின் மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன். ஒரு வருடத்தில் 1200 கோப்புகள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளேன். 17 கோப்புகளுக்கு மட்டும் தான் சில தகவல்கள் தேவைப்பட்டதால் திருப்பி அனுப்பி வைத்துள்ளேன். நானே தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் முடிவுகள் இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநர் முடிவு எடுக்கின்றார் என்று கூறுகின்றனர்.
நான் ஒரு கோப்பிற்கு கூட தன்னிச்சையாக முடிவு எடுத்தது கிடையாது. ஆளுநருக்கு எந்த பொறுப்பு இருக்கின்றதோ அதை தான் நடைமுறைப்படுத்தி வருகிறோம். மேலும் தமக்கு எந்த ஒரு அதிகார வெறியும் இல்லை என கூறினார். தொடர்ந்து பேசுகையில், சிலர் ஆளுநர் மாளிகையை நோக்கி போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் நடத்துங்கள் அது உங்களுடைய உரிமை.
32 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
என்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன். வேலையே இல்லாமல் என்னை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன். ஆளுநரே வெளியேறுங்கள் என்று போராட்டம் நடத்துகிறார்கள். என்னை வெளியேற்றுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. உரிமையும் இல்லை என கூறினார்.