மறைந்த காடுவெட்டி குருவுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாயலில் இருப்பதாக இணையதளத்தில் ஒரு கலகலப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இந்த மாதிரி விஷயங்களை கடுமையாக கிண்டலடித்து ‘வெச்சு செய்வது’தான் நெட்டிசன்களின் வழக்கம்.

 

ஆனால் ஏனோ காடுவெட்டி சிலை விஷயத்தை கலகலப்பாக மட்டுமே டீல் செய்துவிட்டார்கள். இது ஒருபுறமிருக்க பா.ம.க.வின் இரண்டாம் நிலை நிர்வாகிகளும், லட்சக்கணக்கான தொண்டர்களும்  தன் மாவீரன் குருவை இன்னமும் மறக்க முடியாமல் தவிக்கத்தான் செய்கின்றனர். 

காடுவெட்டி குருவை பா.ம.க.வினர் ‘பா.ம.க.வின் பலாப்பழமே!’ என்று செல்லமாக அழைப்பார்கள். காரணம்?...பலா பார்ப்பதற்கு முள்ளும் முறைப்புமாக முரட்டுத்தனமாக இருக்கும் ஆனால் உரித்தால் உள்ளே லெவலே வேற. 

அதேபோல்தான் குருவும்! பார்க்கத்தான் மனிதர் அட்ராசிட்டி பேர்வழி போல் தெரிவாரே தவிர இயல்பில் அத்தனை அன்பான மனிதர். இதை அவருடன் பழகிய ஒவ்வொருவருமே உணர்ந்திருப்பார்கள்! என்று சிலாகிக்கும் பா.ம.க.வினர், குரு வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டபடி...”ஆயிரம் மிரட்டல்கள் அவருக்கு இருந்த போதும் பெரிய பாதுகாப்பு பந்தாக்கள் இல்லாதபடி சாதாரணமாகதான் வாழ்ந்தார். சாதாரண ஒரு வீட்டில் கடைசி வரை கடனோடுதான் இருந்தார். 

அவர் தன் சாதியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார் ஆனால் அதே வேளையில் அடுத்த எந்த சாதியையும் திட்டியதில்லை, இகழ்ந்ததில்லை.  வன்னிய இளைஞர்களுக்கு அதிகம் பிடித்த ஒரு ஹீரோ காடுவெட்டியார்தான்.” என்று சிலிர்க்கிறார்கள். 

அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளைத் திறக்கவைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாகக் களமிறங்கிப் போராடுவது எனப் பல்வேறு சாதனைகளுக்கு  சொந்தக்காரர் தான் இந்த கரடு முரடு  மனுஷன். 

பா.ம.க.வின் உயர்மட்ட தலைவர்கள் ‘சில நேரம் உண்மைகள் கசக்கும். என்னதான் தலைவர் மருத்தவரய்யா சின்னய்யா அன்புமணியை கட்சியில் முன்னிலைப்படுத்தினாலும் கூட தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கு பிடித்தது காடுவெட்டியார்தான். 

இது தலைவரய்யாவுக்கும் தெரியும், அதனால் அவருக்கு இதில் பொறாமையும், மனத்தாங்கலும் கூட உண்டு. காடுவெட்டியார் இடத்தை நிரப்ப யாருமே வரமுடியாது பா.ம.க.வில்.’ என்று தங்களுக்குள் மருகுகின்றனர்.  பலாப்பழங்களின் வாசனை புகழை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது! மறந்துவிடவும் முடியாது!