இனி சத்துணவு சாப்பிட்டுவந்த  மாணவர்கள் பயோமெடிக்கில் கைவைத்தால் தான் சாப்பாடு என்ற புதிய திட்டத்தை சமூகநலத்துறை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.  மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய  பள்ளிகளில் பயோமெட்ரிக்  முறையை அமல்படுத்தும் பணியில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.    காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ,  பின்னர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அது சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.  

இது தமிழகத்தில் மிகப் பெரிய கல்வி புரட்சி ஏற்பட காரணமாக இருந்த திட்டமாகும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 49, 554 சத்துணவு மையங்கள் மூலம் சுமார் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர்.   மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவு சரியாக மாணவர்களுக்கு போய் சேர்கிறதா என்பதை கண்டறிய பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் ,  எத்தனை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதன் பயன் முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேருவதை  அதிகாரிகளால்  உறுதிப்படுத்த முடியவில்லை .இந்நிலையில் அதை   துல்லியமாக கணக்கிட பயோமெட்ரிக் முறையை  பயன்படுத்த சமூகநலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் எனவே, இத்திட்டம்  குறித்து தெரிவித்த சமூகநலத்துறை அதிகாரி ஒருவர், 

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின்  கைரேகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்தபின்னர் அவர்கள் சத்துணவு பெற்றுச் செல்லலாம் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது .  அதேபோல் புதிதாக சாப்பிடவரும்  மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கப்படும் , இதைக் காரணம் காட்டி யாருக்கும் உணவும் வழங்கப்படாமல் நிறுத்தப்படாது.   முழுக்க முழுக்க எவ்வளவு பேர் சத்துணவு பயனடைகிறார்கள் என்பதை கணக்கெடுக்கும் நோக்கில் மட்டுமே  இது செய்யப்படுகிறது .  இதற்கான வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்து  தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்  இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.