Social media users are trolled ADMK Ministers and MLA
அதிமுக அரசையும் ஆட்சியாளர்களையும் கடந்த சிலமாதங்களாக கண்ணா பின்னா வென சரமாரியாக வறுத்தெடுக்கின்றனர் வலைதளவாசிகள்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவினரும் அமைச்சர்களும் அடித்த அந்தர் பல்டிகளையும் காமெடிகளையும் சுட்டிக்காட்டி மீம்ஸ்களை போட்டும் விமர்சித்தும், பல வகைகளில் ட்விட்டர், ஃ பேஸ்புக் என சமூக வலைதளங்களில் கிழித்து தொங்க விடுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கவும் உயிரைக்கூட கொடுக்கவும் தயாராக இருந்த இளைஞர்களும் மாணவர்களும் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தியபோது எந்தவித கவலையும் இல்லாமல் ஆட்சியாளர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தது.
கட்சியிலிருந்து பன்னீர்செல்வம் வெளியேறிய பிறகு பரஸ்பரம் இரு அணிகளும் குற்றம்சாட்டுவது, தர்மயுத்தம் தர்ம யுத்தம் என பேசி பேசி அடிமட்ட அதிமுக தொண்டனுக்கு அல்வா கொடுத்தது. பின்னர் அணிகள் இணைப்பு என்ற பெயரில் பேட்டி கொடுப்பதையே பிழைப்பாக வைத்துகொண்டு பரபரப்பைக் கிளப்பியது.
ஓட்டுப்போட்ட மக்களைக் கண்டுகொள்ளாமல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் கூத்தடித்தது. பிரேக்கிங் பிரேக்கிங் என எப்போதும் பீதியிலேயே வைத்திருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு முன் சோப்பு டப்பா கொடுத்தாலும் அம்மா அம்மா என ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டிக்கர் பாய்ஸ் என பெயரெடுத்த அதிமுக தொண்டர்களையே மிஞ்சும் அளவிற்கு அமைச்சர் செல்லூர் ராஜு காமெடி பண்ணது அண்டத்தையே அதிரவைத்தது ( நீர் ஆவியாவதைத் தடுப்பதற்காக தெர்மாகோலை வைத்து வைகை அணையை அமைச்சர் மறைத்தது)
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறமுடியாமல் தவித்தது, அதை மக்களிடமும் மாணவர்களிடமும் தெரிவிக்க முடியாமல் திணறியது, தொகுதி பக்கம் சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் தொகுதி பக்கமே செல்லாமல் இருந்தது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்றபோது அவரை விமர்சித்தது, பிறகு அவர் சேர்ந்தவுடன் அனைவரும் சேர்ந்து கூஜா தூக்கிய சசிகலாவையே விமர்சித்தது, தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தினகரனை கீழே போட்டு மிதிப்பது என நேரத்திற்கு தகுந்தாற்போல அமைச்சர்கள் அந்தர்பல்டி அடிப்பது என இவையனைத்தையும் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்படியே போய்கிட்டு இருந்தா, வார்டு கவுன்சிலராகூட ஆகமுடியாது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். மக்கள் மனதிலும் அதே எண்ணமே இருப்பதாக தோன்றுகிறது.
