தொடர்ந்து ஒரு மாத காலமாக தன்னையும், குறிப்பாக தன் குடும்பத்து பெண்களையும் அவதூறு செய்து பதிவுகள் வெளியிட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீதும் அவரது கட்சியினர் சிலர் மீதும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சமூக செயல்பாட்டளரான பியுஷ் மனுஷ்.

இன்று காலை தனது மனைவியுடன் சேலம் கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனர் கே.சங்கரைச் சந்தித்து புகார் அளித்த பியுஷ் மனுஷ், பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  `இன்று காலைதான் என்னையும் என் குடும்பத்தைப் பற்றியும் இழிவாகவும் பொய்யாகவும் சித்திரித்த அந்தக் காணொளியைப் பார்த்தேன். அவற்றைக் கேட்டு மனஉளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு தமிழ் படிக்க வராது. அதனால் அவதூறு பரப்பும் அந்த  மீம்ஸ்களைப் படிக்க கொஞ்சம் நேரமானது. 

இவ்வாறு என்மீது அவதூறு பரப்பும் வேலையை பி.ஜே.பி ஆட்களும் இந்துத்துவா அமைப்பின் ஆட்களும் தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளனர். இதுநாள் வரை என் மனைவிக்கு இவை தெரியவந்ததில்லை அவருக்கும் அவ்வளவாகத் தமிழ் தெரியாது. இன்று அந்தக் காணொளி வந்த பின்னர்தான் என் மனைவிக்கு இந்த விஷயங்கள் தெரிய வந்தது, அவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.  

கடந்த டிசம்பர் 23ம் தேதி அன்று நித்யானந்தாவுடன் அமர்ந்திருந்த ஹெச். ராஜாவை நோக்கி ‘ஒரு கற்பழிப்பு குற்றவாளியுடன் அமர்ந்திருக்கிறீர்களே?  ஒரு பெரிய கட்சியின் தேசிய செயலாளர் இப்படி செய்யலாமா?? என்று நான் கேள்வி கேட்ட நாளிலிருந்தே நானும் என் குடும்பத்தினரும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறோம். சுமார் 500க்கும் மேற்பட்டோர் மிகவும் கீழ்த்தரமான தாக்குதலில் என் குடும்பத்தை மட்டமாக சித்தரித்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்’ என்கிறார் பியூஷ் மனுஷ். அவரது மனு நடவடிக்கைக்காக சைபர் கிரைம் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.