உதகை மலை ரயில் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில். " தனியார் நிறுவனம் மலை ரயில் கட்டணத்தை 3000 ரூபாய் என உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக பலர் சொல்கின்றனர், ஆனால் இதைவிட குறைந்த கட்டணத்திற்கு மலைகளையே தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் " தனியாரைவிட இளகிய மனதுடன் இருக்கும் அரசு" என்ற தலைப்பில்  நக்கலும் நையாண்டியுமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: 

உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை  வாக்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 3 ஆயிரம் ரூபாய், மார்ச் முதல் ஜூன் ஜூலையில் சீசன் காலத்தில் போய்வர ஒரு நபருக்கு 12 ஆயிரம் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே டார்ஜிலிங் மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்க பட்டுவிட்டது. இந்தியா முழுக்க 150 ரயில்கள் தனியாருக்கு கொடுக்க அட்டவணை வெளியிடப்பட்டு ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டன. இதில் தென்னக ரயில்வேயில் 26 ரயில்கள் அடக்கம். தாம்பரம் முதல் கன்னியாகுமரி சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் ரயில்களும் அடங்கும். 

ஒரேநாளில் 485 ரூபாய் இருந்த கட்டணம் 3 ஆயிரம் ரூபாயா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். இதுவெல்லாம் அரசு திடீரென செய்யவில்லை முறையாக அறிவித்து தான் செய்கிறது. தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தான் செய்கிறது, தனியார் நிறுவனம் மலை ரயில் கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாய் என எச்சரித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக பலர் சொல்கின்றனர், இதைவிட குறைந்த கட்டணத்திற்கு மலைகளையே தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு இப்பொழுது சொல்லுங்கள் தனியாரை விட இளகிய மனதோடு தானே அரசு நடந்து கொள்கிறது என சு.வெங்கடேசன் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.