திருநெல்வேலி

இதுவரை நான் பேசிய வசனங்கள் சம்பளத்துக்கு பேசியது, இப்போது மக்களுக்காக பேசுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று 2–வது நாளாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இதனையொட்டி அவர் திருநெல்வேலி மாநகரமான பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகில், மேலப்பாளையம் சந்தை முக்கு, நகர வாகையடி முக்கு ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசினார்.

நகர வாகையடி முக்கு பகுதியில் கமல் பேசியது: "திருநெல்வேலி நகர வாகையடி முக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். பல தலைவர்கள் நின்று பேசிய இடம். அதே இடத்தில் நானும் பேசிக் கொண்டு இருக்கிறேன். என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்களாகிய நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். 

நான் அரசியலுக்கு வந்துள்ளேன், இது காலத்தின் கட்டாயம். மக்கள் நீதி மய்யம் உங்கள் கவலைகளை புரிந்து கொள்ள வந்துள்ளது. இந்த மக்கள் நீதி மய்யத்துடன், ‘‘மய்யம் விசில்’’ என்ற செல்போன் செயலி உள்ளது. 

இந்த செயலியை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது சாதாரண செயலி அல்ல. தமிழகத்தை நாம் செதுக்கும் உளி, சிறு உளிதான், கூர் உளி, இன்னும் கூர்மையாக வேண்டும். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

எனக்காக இவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்கள். உங்கள் அன்புக்காக பேசுகிறேன். இதுவும் எனது ஊர்தான், நீங்கள் எங்கெல்லாம் இருக்கிறீர்களோ அதெல்லாம் எனது ஊர்தான். இதுவரை நான் பேசிய வசனங்கள் சம்பளத்துக்கு பேசியது, இது உங்களுக்காக பேசுவது, இது ஒத்திகை பார்த்து பேசுவது கிடையாது, உங்கள் அன்புக்காக பேசுகிறேன்.

முதலில் நடந்த கூட்டங்களில் நான் சரியாக பேசவில்லை என கூறினார்கள். அப்போது நீங்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோனதால் என்னால் சரியாக பேச முடியவில்லை. தற்போது நான் இந்தியனாக, தமிழனாக என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து கட்சியை தொடங்கி உள்ளேன். நான் தொடங்கினேன் என்று கூறுவதைவிட நீங்கள் என்னை கட்சி தொடங்க வைத்துள்ளீர்கள்.

உங்கள் ஆதங்கம், கவலை, கோபம் இவை அனைத்தும் என் மீது கொப்பளித்து தெரித்து விழுந்தது. அதில் இருந்து எழுந்தது தான் மக்கள் நீதி மய்யம். இங்கு கூடியிருக்கும் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு நற்பணி இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தினோம். தற்போது அது மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்து உள்ளது. நாம் இனி செய்யப்போவது சாதனை.

சாதனை என்பது சொல் அல்ல, செயல். அந்த செயலை மேற்கொள்ளவே மக்கள் நீதி மய்யம் கட்சியின், ‘மய்யம் விசில்’ செயலியுடன் தொடங்கி விட்டோம். இதைத்தொடர்ந்து கொண்டு செல்ல ஏற்கனவே பலர் உள்ளனர். இதில் வருகிறவர்களையும் வரவேற்கிறோம். 

வாருங்கள் புதிய தமிழகம் படைக்கும் இந்த பொறுப்பில் நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள். இது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். இந்த செயலி வன்முறையின்றி நாம் புதிய புரட்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு நல்ல கருவி. மக்கள் நீதி மய்யத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.