கர்நாடகாவில் குமாரசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவதில் பாஜக குறியாக உள்ள நிலையில், பாஜகவில் உள்ள கறுப்பு ஆடுகளால், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறி பாஜகவுக்குக் கிலியை ஏற்படுத்தியிருக்கிறார். 


 கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்குக் கடிதம் கொடுத்ததால், குமாரசாமி அரசு ஆட்டம் கண்டது. குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்துவந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பாஜக பக்கம் சாய்ந்தார்கள். 18 எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கையால சட்டப்பேரவையில் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 100 ஆக குறைந்துவிட்டது. கர்நாடகாவில் 105 எம்.எல்.ஏ.க்களை பாஜக கொண்டுள்ளது. இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவால் அதன் பலம் 107 ஆக அதிகரித்திருக்கிறது. எனவே எளிதாக ஆட்சி அமைக்கலாம் என்று கர்நாடகாவில் பாஜக காய நகர்த்திவருகிறது.
இந்நிலையில் முதல்வர் குமாரசாமி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் நம்பிக்கை வாக்குக்கு அனுமதிக்கும்படியும் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் அனுமதி கோரினார். முதல்வரின் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை ஏற்கப் போவதாக சபாநாயகர் ரமேஷ்குமாரும் அறிவித்துள்ளார். வரும் செவ்வாய்கிழமை கர்நாடக விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அதன் பின்னரே அங்கே அரசியல் நிலவரம் தெளிவாக தெரியவரும். 
காங்கிரஸ் - மஜத கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தைரியமாக செல்ல முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர்களுக்கு போதுமான ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இக்கட்சிகளின் இந்த திடீர் நகர்வை பாஜகவும் அதிர்ச்சியோடு கவனித்துவருகிறது. இதையடுத்து காங்கிரஸ், மஜத மட்டுமல்லாமல் பாஜகவும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 
இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி புதிய தகவலை வெளியிட்டு பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறார். “குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும். இதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாமல் தடுக்க பாஜக திட்டமிட்டுவருகிறது. ஏனென்றால், பாஜகவுக்கு பயம். பாஜகவுக்குள் கறுப்பு ஆடுகள் இருப்பது அக்கட்சிக்கு நன்றாகவே தெரியும். அந்தக் கறுப்பு ஆடுகளை நினைத்துதான் எடியூரப்பா பயந்துவருகிறார்’’ என்று கூறி பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்.
எனவே பாஜகவில் உள்ள கறுப்பு ஆடுகளை நம்பிதான் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் களம் இறங்கப்போகிறதோ என்ற கேள்வியும் கர்நாடகாவில் எழுந்திருக்கிறது.