தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை குறி வைத்து அமமுகவுக்கு இழுத்து வர டி.டி.வி.தினகரன் ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளதை அறிந்து பதற்றத்தில் இருக்கிறது அதிமுக தலைமை. 

தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வலுவாக இருக்கும். பாதகமாக இருந்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அதன் பிறகு அதிமுக முக்கியப்புள்ளிகள் டி.டி.வி.தினகரன் பக்கம் சாய்ந்து விட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் எடப்பாடிக்கு சாதகமாக இருந்தாலும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை வலைக்க தயாராகி வருகிறது டி.டி.வி. டீம். முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கு அமமுக குறி வைத்துள்ளது.

 

காரணம் அதிமுகவில் வடமாவட்டம், கொங்கு மண்டலம் உள்பட சில மண்டலத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் பதவி, பணம் என்று செல்வத்தில் மிதந்து வருகின்றனர். ஆனால் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள தென் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் முக்கியத்துவம் இன்றி அதிருப்தியில் உள்ளனர். இதனை உணர்ந்து கொண்ட டி.டி.வி.தினகரன் கட்சியை வளர்க்க தென் மாவட்ட அதிமுகவினரை அலேக்காத் தூக்கி தன் கட்சியில் இணைக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார். அதன்படியே தென் மாவட்டங்களில் இருந்து தேர்தலுக்கு பிறகு அதிமுகவை விட்டு பலரும் விலகி அமமுகவில் இணைய தயாராகி வருகிறார்கள்.

 

அவர்கள் இணையும் நிகழ்வை சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி அசத்தவும் தென்மாவட்ட அதிருப்தி அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் ஆரம்பித்து அடுத்தடுத்து மற்ற மண்டலங்களில் உள்ள அதிமுகவினருக்கு குறிவைத்துள்ளார் டி.டி.வி.தினகரன் என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்.