டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த கலைராஜன் திமுகவில் இணைந்ததை திமுகவில் இருக்கும் சிலரால் கூட நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் தினகரன் மற்றும் தினகரன் குடும்பத்தினர் மீதான கலைராஜனின் விசுவாசம் தான்.

தினகரன் மட்டுமல்லாமல் சசிகலா மீதும் மிகுந்த விசுவாசத்துடன் இருந்தவர் கலைராஜன். கட்டப்பஞ்சாயத்து வசூல் வேட்டை என்று கலைராஜன் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால்தான் கடந்த 2014ஆம் ஆண்டு கலைராஜனுக்கு ஜெயலலிதா மீண்டும் சீட் கொடுக்கவில்லை. அதேசமயம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கலைராஜன் ஜெயலலிதா நீக்கவும் இல்லை. 

பொதுவாக ஜெயலலிதா ஒருவரை கட்சியில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அனைத்து பதவிகளையும் பறித்து ஓரமாக உட்கார வைத்து விடுவது வழக்கம். ஆனால் கலைராஜன் விஷயத்தில் ஜெயலலிதா கடினமாக நடந்து கொண்டதன் பின்னணியில் சசிகலா இருந்திருக்கிறார். ஒருவிதத்தில் கலைராஜனும் சசிகலாவும் உறவினர்கள். இந்த கரிசனத்தால் தான் அடுத்தடுத்த புகார்களையும் பொருட்படுத்தாமல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் கலைராஜன் நடித்துள்ளார்.

இந்த அளவிற்கு சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த கலைராஜனை தினகரன் இடம் இருந்து பிரித்து திமுகவில் இணைத்தது செந்தில் பாலாஜி.திமுகவில் இணையும் போதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் செந்தில் பாலாஜியை ஸ்டாலின் சேர்த்துள்ளார். இதன் அடிப்படையில்தான் கரூரிலிருந்து முதலில் தனது வேலையை தொடங்கிய செந்தில் பாலாஜி அம்மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் திமுக பக்கம் திருப்பிவிட்டார்.

தற்போது செந்தில் பாலாஜி கண் பார்வை தினகரனுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய மேல்மட்ட நிர்வாகிகள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் ஒரு கட்டமாக தான் வலைவிரித்து கலைராஜன் பிடித்து ஸ்டாலினிடம் கொண்டு சென்று சேர்த்துள்ளார் செந்தில் பாலாஜி. கலைராஜனை தொடர்ந்து செந்தில் பாலாஜி அடுத்து குறிவைத்துள்ள நபர் பழனியப்பன். தற்போது தினகரனுடன் மிகவும் நெருக்கமாக உள்ள ஒருசில பேரில் பழனியப்பன் மிகவும் முக்கியமானவர்.

 

பழனியப்பனுக்கு கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டங்களில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டு. ஆனால் இந்த இரண்டு மாவட்டங்களிலும் திமுகவிற்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் சக்தி வாய்ந்த நிர்வாகிகள் யாரும் இல்லை. எனவே திமுகவிற்கு பழனியப்பனை கொண்டுவந்து முக்கிய பொறுப்பை வாங்கி கொடுத்துவிடலாம் என்று செந்தில்பாலாஜி காய் நகர்த்தி வருகிறார்.

மாவட்ட செயலாளர் பதவியுடன் அமைச்சர் பதவி என்றும் ஆசை காட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்தலுக்கு முன்னதாக இல்லை என்றாலும் கூட தேர்தல் முடிந்த பிறகு பழனியப்பனை ஸ்டாலினை சந்திக்க வைப்பது உறுதி என்று கூறி வருகிறார் செந்தில் பாலாஜி.