மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜகவுடன்  விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதில் கொள்கை ரீதியில் எதிர் எதிர் துருவமான சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர்கள் ஒருசிலர் கருத்து தெரிவித்ததாகவும், இதனை காங்கிரஸ் தலைமை தீவிரமாக பரிசீலனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என கடைசி நேரத்தில் சரத்பவார், சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாமதப்படுத்துவதன் மூலம் தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவிடம் முதலமைச்சர்  பதவி மற்றும் ஆட்சியில் சமபங்கு கேட்க திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும் காங்கிரஸ் கடைசி நேரத்தில் சிவசேனாவுக்கு ஆதரவு கடிதம் கொடுக்க மறுத்ததற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வேறு காரணத்தை கூறுகின்றனர்.
“சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதன் மூலம் சரத்பவார் மாநிலம் முழுவதும் கட்சியை பலப்படுத்திவிடுவார் என நினைத்ததால்தான் காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சத் தொண்டர்கள் நினைன்னிறார்கள்.

முன்னதாக தேசியவாத காங்கிரசின் செல்வாக்கு சரிந்தது போல் கூறப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பின் தேசியவாத காங்கிரஸ் வலுப்பெற்றது.

சிவசேனாவுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிடும் என அவர்கள் நினைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

காங்கிரஸ் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்காதது குறித்து முன்னாள் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் கூறுப்போது,  “சிவசேனா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சி. எனவே அவர்களுக்கு ஆதரவு அளித்து இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிவசேனாவை சேர்ந்த மத்திய மந்திரி நேற்றுமுன்தினம்தான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்த பிரச்சினையில் காங்கிரஸ் முடிவை எடுக்க தாமதப்படுத்தியது என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தால், நாங்கள் ஏன் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்?. இந்த பிரச்சினை ஒரு நாளில் முடியும் என நான் நினைக்கவில்லை” என்றார்.