மகாராஷ்டிராவில் தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்று சிவசேனா கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் கிடைத்தன. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர், 50 சதவீத அமைச்சர்கள் என பாஜகவுக்கு சிவசேனா விதித்த நிபந்தனைகளால் கூட்டணியில் சிக்கல் நிலவிவருகிறது. சிவசேனாவின் நிபந்தனைகள் பாஜக ஏற்கவில்லை. இதனால். ஆட்சி அமைவதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் தொடர்ந்து பிடிவாதம் காட்டிவருவதால், மகாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பு அடங்கவில்லை.


இதற்கிடையே சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாகக் கூறியதால், இன்னொரு புறம் அரசியல் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. இந்தத் திடீர் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சிவசேனா எம்.பி.க்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசியதையடுத்து, இந்தப் புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. 
இந்நிலையில் சிவசேனா காங்கிரஸின் ஆதரவை கோரினால், ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்துகளும் காங்கிரஸ் கட்சிகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு நடந்துவரும் நிலையில், தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக சிவசேனா கட்சி அதிரடியாகக் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “எங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் 175 ஆக உயரவும் வாய்ப்பு உள்ளது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த எம்.பி.தான். சரத் பவாரை சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது முதல்வர் பதவி சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.