வரும் நாடாளுமனறத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 10 தொகுதிகள் எது? எது? என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் ஒரு சில தொகுதிகள் காங்கிரசுக்குத்தான் என்பது உறுதியதகியுள்ளது.

அப்படிப்பட்ட தொகுதிகளில் ஒன்றுதான் சிவகங்கை. இத் தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடக்கூடும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதி ஒதுக்குவது உறுதியான நிலையில் சிதம்பரம் அல்லது அவரது மகன் கார்த்தி போட்டியிடலாம் என, கட்சியினர் கூறி வந்தனர். சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால், போட்டியிட வாய்ப்பு இல்லை. 

இதனால் கார்த்திக்கு சீட் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் 'ஏர்செல் மேக்சிஸ்' வழக்கால் கார்த்திக் சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்பட்டால், மருமகள் ஸ்ரீநிதியை களமிறக்க சிதம்பரம் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.

நேற்று காரைக்குடியில் காங்கிரஸ்  சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடந்தது. 

இதுவரை கட்சி கூட்டங்களில் தலைகாட்டாத கார்த்திக்கின் மனைவி ஸ்ரீநிதி இதில் பங்கேற்றார். அவர் பேசும்போது, 'முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் 'வாட்ஸ் ஆப்' குரூப் துவங்க வேண்டும். சமூக வலை தளங்களை முன்னெடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், தங்களுக்கோ, மகனுக்கோ, எம்.பி., சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த முக்கிய நிர்வாகிகள் தற்போது நொந்து போயுள்ளனர்.