ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி..! உற்சாகத்தில் பாமக நிர்வாகிகள்..!
புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே, அதிரடியாக தனித்து போட்டி என்று அறிவித்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுகவை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கியதால் பல்வேறு இடங்களில் பாமக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்புகளை இழந்திருந்தனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே, அதிரடியாக தனித்து போட்டி என்று அறிவித்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது முதலே அதிமுக தேர்தலுக்கு தயாராக ஆரம்பித்துவிட்டது. அப்போதே பாமகவுடன் அதிமுக தரப்பில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அணுகியதாக கூறுகிறார்கள். ஆனால், பாமக அதிமுகவிற்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்ததாகவும் இதற்கு காரணம் பாமக திமுக கூட்டணிக்கு செல்லக்கூடும் என்று அதிமுக நம்பிக் கொண்டிருந்தது.
ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் தனித்து போட்டி என்கிற அறிவிப்பு பாமக தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. இந்த முடிவு பின்னிரவில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட ஒன்பது மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் பல மணி நேரம் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய ராமதாஸ், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் பாமகவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதை மறுக்க முடியாது என்றார். ஆனால் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பாமக பெரும் பாதிப்பை சந்தித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு அதிமுக மற்றும் அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் போட்டி வேட்பாளர்களை களம் இறக்கியதை தான் இன்னும் மறக்கவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து உடனடியாக அதிமுக தலைமையிடம் முறையிட்டும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் ராமதாஸ் டென்சனா கூறிப்பேசியுள்ளார். அதே சமயம் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்த பாமக நிர்வாகிகளை தான் நேரடியாக அழைத்து வாபஸ் பெற வைத்ததையும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக இப்படி ஒரு தர்மசங்கடமான சூழலில் தங்களை தள்ளக்கூடும் என்பதால் தனித்து போட்டியிடுவதே சிறப்பானதாக இருக்கும் என்று ராமதாஸ் கூற, அந்த முடிவே எடுக்கப்பட்டுள்ளது. பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசும் கூட தனித்து போட்டி என்கிற முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இது குறித்த தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கடந்த வாரமே பாமக தெரிவித்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதனால் தான் அன்புமணி மகள் திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வட தமிழகத்தை சேர்ந்தவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை தொகுதிகளில் பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இந்த மாவட்டங்களில் நகர்பகுதிகள் தொடங்கி கிராமப்பகுதிகள் வரை பாமகவிற்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. எனவே தனித்து போட்டியிட்டாலே கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும் என்று பாமக நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால் தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பேரத்தை வலுவாக நடத்த முடியும் என்பது பாமக தலைமைக்கு தெரியும்.
இதன் காரணமாக தேர்தல் செலவுக்கும் வேட்பாளர்களுக்கு கணிசமான அளவில் பாமக தலைமையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் என்கிறார்கள். இதனால் விருப்ப மனு விநியோகம் துவங்கிய முதல் நாளிலேயே வட தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் பாமக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இதே போல் பாமக மாவட்டச் செயலாளர்களும் உற்சாகத்துடன் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளனர்.