சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ பெண் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகிய மருத்துவ குழுவினரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதையடுத்து லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் நேற்று புறப்பட்டு சென்றனர். அவர்கள் செல்வதற்கு முன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழுவினருக்கு சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்றனர். அதனடிப்படையில் அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் இந்த வார இறுதியில் மீண்டும் வருகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தொலைபேசி, இ-மெயில் மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை பிசியோ தெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் தொடர்ந்து நேற்று 3வது நாளாக ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளித்தனர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழுவினரும் 24 மணி நேரமும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.