பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பேருந்து, கார் போன்றவற்றில் ஜிபிஎஸ் கருவி, அவசர உதவி பொத்தான் ஆகியவை இடம்பெற்றிருந்தால் மட்டுமே ஏப்ரல் 1 முதல் வாகனப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு மாநில போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து ஆணையரக மூத்த அதிகாரிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி புதிய நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பொது பயன்பாட்டுக்கான பேருந்துகள், கார்களில் ஜிபிஎஸ் கருவி, அவசர உதவி பொத்தான் ஆகிய இடம்பெறாத வாகனங்களை எக்காரணம் கொண்டும் பதிவு செய்து தரக்கூடாது என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரி வாகனங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.

புதிய வாகனங்கள் மட்டுமல்லாமல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இத்தகைய வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி, அவசர உதவி பொத்தான் நிறுவப்படுவது அவசியமாகும். ஆனால் மூன்று சக்கர வாகனமான ஆட்டோவுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.