பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் போது அவர் தெரிவித்ததாவது:  பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன் கள பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை முதலான பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தினந்தோறும் குறைந்தபட்சம் 12 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை குறுஞ்செய்தியாக மேற்குறிப்பிட்ட பணியாளர்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், IMA,IAP மூலம் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும், 

சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு  இருப்பு வைத்து, முன் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கொசுப்புழு தடுப்பு பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அழித்தல், மேல்நிலைத் தொட்டி மூடிய நிலையில் உள்ளனவா என ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தீவிரப்படுத்தி, முந்தைய காலகட்டங்களில் டெங்கு பாதித்த பகுதிகளை hotspot ஆக கருதி, அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும். மேலும் நீரினால் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்க, குடிசைப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கூட்டு பணியாக சுத்தம் செய்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.