இன்று வெளியாகியிருக்கும் காலா டீஸர் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பானதாக இல்லை! என்று விமர்சனங்கள் டார்கெட் செய்வதால் ரஜினி மற்றும் தனுஷின் டீம் அப்செட்டுக்கு ஆளாகியிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தடதடக்கின்றன.

தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் லைக்கா இணைந்து வடிவமைத்த ஷெட்யூல் படி காலா டீஸர் நேற்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் காஞ்சி மடாதிபதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வழிவிட்டு இன்று காலை 10 மணிக்கு அந்த டீஸர் வெளியாகியிருக்கிறது.

மொத்தம் 1 நிமிடம் 13 நொடிகள் ஓடும் இந்த டீஸரில் வழக்கம்போல் பிரேமுக்கு பிரேம் ரஜினி தெறிக்கிறார். கரிகாலன் என்பது படத்தில் அவரது கேரக்டர் பெயர் என்பது அவரது டயலாக் மூலமாகவே தெளிவாகிறது. காலா என்றால் இந்தியில் கறுப்பு என்று அர்த்தம். மும்பை பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பெயருக்கு ஏற்பவே ரஜினியின் உடை, பேக்டிராப், அதிகமான இரவு சீன்கள் என்று டீஸர் நெடுகிலும் கறுப்பு நிறம் ஆட்சி செலுத்துகிறது.

ரஜினியின் ஜோடியாக ஈஸ்வரி ராவ் என்பது டீஸரின் சில நொடிகள் மூலம் புலனாகிறது. ’போடுவாரு போடுவாரு, எத்தனை நாள்ன்னு நானும் பாக்குறேன்!’ எனும் டயலாக்குடன் கடக்கிறார் கறுப்பழகி ஈஸ்வரி ராவ்.

கபாலி போல் இல்லாமல் காலாவில் ரஜினிக்கு செம்ம நிகரான வில்லன் இருப்பார் போல தெரிகிறது. அது பாலிவுட்டின் பட்டாசு ஆக்டர், நானா படேகர்!தான். டீஸர் சொல்வது படி பார்த்தால் ஏதோ அரசியல்வாதி போல் தெரிகிறார். டீஸரிலேயே அவருக்கு செம்ம முக்கியத்துவம் கொடுத்து, நம்மூர் சமுத்திரகனியை டம்மியாக்கி இருக்கிறார்கள்.

கேமெரா பளீரென இருக்கிறது. மழையில் நடக்கும் ஆக்‌ஷன் பிளாக், ஏதோ விழா நாள் என்று எல்லா நிறங்களையும் கறுப்பின் அடர்த்தியோடு அட்சரசுத்தமாக தந்திருக்கிறது. சந்தோஷ்நாராயணனின் இசை?...’க்யூட்’!

ரஜினிக்கு இந்த படத்தில் செமத்தியான ஆக்‌ஷன் பிளாக்குகள் இருப்பதாக தெரிகிறது. இந்த முறை ‘நேச்சுரல் ஃபைட்’ சிஸ்டத்தை பயன்படுத்தியிருப்பதாக காலா டீம் தெரிவித்திருந்தது. ஆனால் டீஸரில் அடியாட்கள் பறப்பதை பார்க்கும்போது தலைவர் வழக்கமான மாஸ் ஜிம்மிக்ஸ் ஃபைட்டைத்தான் கையாண்டிருப்பார் என்று நினைக்க வைக்கிறது.

ரஜினி பேசும் தமிழ் எல்லா படங்களிலும் ‘ஸ்டாண்டர்டு தமிழ்’ ஆகத்தான் இருக்கும். ஆனால் முதன் முறையாக இந்த படத்தில் வட்டார வழக்கை பயன்படுத்தியிருக்கிறார். அது நெல்லை வட்டாரா வழக்கு.

மற்றபடி விசேஷமாக சொல்லிக் கொள்ள டீஸரில் ஒன்றுமில்லை என்றே விமர்சனம். வெகு சிம்பிளாக இருக்கிறது காட்சிகள். அதிலும் ‘காலான்னா கறுப்பு. காலாச்சாமி. சண்டை போட்டு காக்குறவர்.’ என்று வரும் வாய்ஸ் ஓவர் ! வாய்ஸானது மிக மிக ஆவரேஜ் லெவலில் இருப்பது அதிர்ச்சி.
வழக்கம் போல் ரஞ்சித்தின் ‘ஒடுக்கப்பட்டோர் குறியீடு’ பறையடிக்கும் பெண் மூலம் கடந்து செல்கிறது.

நெல்லை வட்டார வழக்கை ரஜினி அப்படியொன்றும் சிறப்பாக கையாளவில்லை என்பது டீஸர் நொடிகள் மூலம் தெரிகிறது. ’க்யா ரே’ என்று பக்கா மாடுலேஷனுடன் அவர் இந்தியை உச்சரிக்கையிலேயே அடிபட்டுப் போகிறது நெல்லை தமிழ். அடுத்து தொடரும் ‘ஒத்த ஆளா நிக்குறேம், தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே.’, ‘இந்த கரிகாலனோட முழு ரெளடித்தனத்த நீங்க பார்த்ததில்லைல்ல, பாப்பீங்கல!’ என்பதில் நெல்லைத்தனம் ஒன்றும் பெரிதாய் தெறிக்கவில்லை.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நெல்லை வட்டார வழக்கை மிக துல்லியமாக பேசிப் பிரித்திருப்பார். ஆனால் ரஜினியின் புது முயற்சியில் அந்த பர்ஃபெக்‌ஷன் மிஸ் ஆகியிருக்கிறது. ஆக மொத்தத்தில் அப்படியொன்னும் மிரட்டவில்லை காலா டீஸர்.

இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் டீஸர்!