பாஜகவின் கூச்சலால் சாதிக்க முடியாததை மன்மோகனின் மௌனம் சாதித்தது என்றும் கடந்த 10 ஆண்டுகளாக  உங்கள் மேல் தவறான அபிப்ராயம் வைத்திருந்தேன் அதற்காக தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் சிங்கிடம் கிரிக்கெட் வீரர் நச்ஜோத் சிங் சித்து கேட்டுக் கொண்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

இதில் பங்கேற்றுப் பேசிய பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மன்மோகன் சிங்கிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.அவர் பேரும்போது, மதிப்பிற்குரிய மன்மோகன் சிங் அவர்களே, உங்கள் முன் நான் தலை குனிந்து நிற்கிறேன். உங்களைப் பற்றிய நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் கூச்சலால் சாதிக்க முடியாததை மன்மோகன் சிங்கின் மௌனம் சாதித்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

நீங்கள் ஒரு ஜோசியராக மாறிவிடலாம். ஜிடிபி 2% சரியும் என்றீர்கள். அது அப்படியே நடத்திருக்கிறது. நீங்கள் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் அரேபியக் குதிரை போல வேகமாக வளர்ந்தது. இப்போது ஆமை வேகத்தில் நகர்கிறது.” என்றும் சித்து பாராட்டிப் பேசினார், தொடர்ந்து அவர் மன்மோகன் சிங்கின் காலில் விழுந்து ஆசி பெற்றார்