மதுரை பெருங்குடியை சேர்ந்த போக்குவரத்து காவலர், உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டது.
மதுரை மாநகர் தெற்கு வாசல் காவல்நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து தலைமை காவலர் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் 71 பேருக்கும் மதுரை மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தெற்கு வாசல் காவல்நிலையத்திற்கு காவல்துறையினர் யாரும் பணிக்கு செல்ல வேண்டாம் என மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்குள் யாரும் செல்ல முடியாத வகையில் கதவு அடைக்கப்பட்டு, மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன. நாளை முதல் தற்காலிகமாக மாற்று இடத்தில் காவல்நிலைய அலுவலகப் பணி நடைபெற உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது.