அரசியலில் அ.தி.மு.க.வுக்கு என்று தனி ஸ்ட்ராட்டஜி இருக்கிறது. வெறும் பிரச்சாரம் மட்டும் பத்தாது ‘அதுக்கும் மேலே சில விஷயங்களை களத்தில் செய்ய வேண்டும்.’ என்று நினைப்பார் ஜெயலலிதா. 2001தேர்தலுக்கு முன் ‘தி.மு.க. ஆட்சியில் எல்லாம் சீர்கேடு.

அடுத்து ஜெயலலிதாவின் ஆட்சிதான்’ என்று வாய்மொழியாக ஒரு பிரச்சார அலையை உருவாக்கினார் ஜெ., இதில் அவருக்கு உறுதுணையாக இருந்து கைகொடுத்ததோடு மட்டுமில்லாமல் அதை செயல்படுத்தி, ஜெ.,வின் வெற்றிக்கு வழியும் வகுத்தது சில உயர் போலீஸ் அதிகாரிகள்.
இப்படியான ஸ்ட்ராட்டஜிகளைத்தான் அரசியலில் பெரிதும் நம்புவார் ஜெ.,

 

இப்போது அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடியும் இதையேதான் பயன்படுத்துகிறார். அதாவது, தனிக்கட்சி துவங்கியிருக்கும் கமல்ஹாசன், ஆட்சிக்கு எதிராக பெரும் பிரச்சார குடைச்சலை உருவாக்கியிருக்கிறார். ‘ஊழல்! ஊழல்!’ என்று எடப்பாடி அரசுக்கு எதிராக எம்பி கிளம்பியிருக்கும் கமலை கண்டு அ.தி.மு.க. அச்சுறுவது தனி என்றால் பி.ஜே.பி.க்கு எதிரான கமலின் கருத்துக்களால் அக்கட்சியும் எரிச்சலுற்று நிற்கிறது.

இதைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து எடப்பாடிக்கு ஒரு ஹின்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதன்படி ‘கமலை இப்படியே பேச விட்டால் எதிர்வரும் தேர்தல்களில் அது சிக்கலாக அமையலாம். அவரது தரப்பின் வீக்னெஸை கவனியுங்கள்!’ என்பதுதான் அது.

இந்த உத்தரவை தொடர்ந்து தனி ஸ்ட்ராட்டஜி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார் எடப்பாடி. அதன்படி தமிழக உளவுத்துறை போலீஸுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் ‘கமல்ஹாசன் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ள நபர்களான ஸ்ரீபிரியா உள்ளிட்ட அத்தனை பேரின் ஹிஸ்டரியையும் கலெக்ட் பண்ணுங்கள்.

அவர்கள் மீதான பழைய வழக்குகள், பிஸ்னஸ், சொத்து விபரங்கள், இவர்கள் யாரையாவது பண ரீதியிலோ அல்லது வேறு வகையிலோ சீட்டிங் செய்திருந்தால் அது பற்றிய வழக்கு மற்றும் விபரங்கள்! ஆகிய அனைத்தையும் கலெக்ட் செய்து ஆதாரத்தோடு கொடுங்கள்.” என்று கோரப்பட்டுள்ளதாம்.

இப்படி கலெக்ட் செய்யப்படும் தகவல்களில் கமல் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பெயரில் அழுக்குகள், சர்ச்சைகள் மற்றும் களங்கங்கள் இருந்தால் அவை அனைத்தும் இணையதளம் வாயிலாக அம்பலப்படுத்தப்படும், மீம்ஸ்களாக்கப்படும், அ.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் மீடியா முகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் புட்டுப்புட்டு வைக்கப்படும். மேலும் அவற்றை வெளியிட விரும்பும் பத்திரிக்கைகளுக்கும் ஆதாரத்தோடு வழங்கப்படுமாம்.

இதன் மூலம் ‘ஊழலுக்கு எதிரான புரட்சி’ என்று கிளம்பியிருக்கும் கமலின் கையோடு கை சேர்த்திருக்கும் நபர்களின் களங்க முகங்கள் தோலுரிக்கும் முயற்சிகள் நிறைவேற்றப்படும் என்கிறார்கள்.

உத்தரவை ஏற்று களமாட துவங்கிவிட்டது தமிழக உளவுத்துறை போலீஸ்!