ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உஷாராக இருக்க சொல்லும் அமைச்சர்..!
அண்ணா பல்கலைக்கழகம், சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஆனால் 4 கல்லூரிகளிலும், மாணவர்கள் மாஸ்க் அணிவது, உணவருந்தும் போது தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் குடியிருப்பு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனா தொற்று எண்ணிக்கை உலகம் முழுவதும் கூடுதலாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் நேற்று 4000 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. அதேபோல, கேரளாவில் தொற்று எண்ணிக்கை 1000-க்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனால், முதலமைச்சர் ஆலோசனையின் படி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளை மிகுந்த கவனத்துடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிரிழப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஆனால் 4 கல்லூரிகளிலும், மாணவர்கள் மாஸ்க் அணிவது, உணவருந்தும் போது தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை 370 பேருக்கு தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கிரியப்பா சாலையில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மாநகராட்சி மண்டலங்களில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகமாக உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.