கல்விக்கட்டணத்தை குறி வைத்து பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை காரணம் காட்டி கல்விக்கட்டணம் வசூல் செய்கின்றனர். அப்படி கல்விக்கட்டணம் செலுத்த சென்ற பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், கல்விக் கட்டணம் வசூல், ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்களும், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர்.

தாளாளர், முதல்வருக்கு கொரோனா இருப்பது குறித்து பள்ளி நிர்வாகம் எதுவும் தெரிவிக்காத நிலையில், தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்திடமிருந்து 140 மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களின் விவரத்தை வாங்கி, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், பெற்றோர்களில் 2 பேருக்கும், அதே பள்ளி ஆசிரியரின் 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களையும் கண்டறிந்து பரிசோதனை செய்யும் முயற்சியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொரோனா பரவியது அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.