இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 28 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் சுமார் 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில்  உலக அளவில் 1 கோடியே 32 லட்சத்து 40 ஆயிரத்து 427 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரத்து 601 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 77 லட்சத்து 7 ஆயிரத்து 190 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. 

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில்  கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது,   இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் பன் மடங்காக அதிகரித்துள்ளது, ஊரடங்கு விதிகள், தளர்வு, பரிசோதனைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வந்தாலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  28 ஆயிரத்து 179 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 7,645 ஆக உயர்ந்துள்ளது. 

இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிக்கவும் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 23 ஆயிரத்து 727 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர், சுமார் 5 லட்சத்து 72 ஆயிரத்து 112 பேர் சிகிச்சை பெற்று இந்த வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும் 3 லட்சத்து 11 ஆயிரத்து 206 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதில் 8 ஆயிரத்து 944 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேரில்  657 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பொருத்த வரையில் 10 லட்சம் பேருக்கு 17 பேர் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  எதிர்வரும் வாரங்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.